கரோனா அச்சம்: ஒரே குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் இருவர் பலி

By காமதேனு

மதுரை கல்மேடு அருகிலுள்ள எம்ஜியார் காலனி பகுதியில் வசிப்பவர் ஜோதிகா. இவர் தனது தாய் லட்சுமி மற்றும் இரு மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜோதிகாவுக்கு கரோனா தொற்று இருப்பதாக நேற்றைய தினம்(ஜன.8) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜோதிகா வீட்டுக்கு இன்று காலை சுகாதாரப் பணியாளர்கள் சென்ற போது, வீட்டில் உள்ளோர் தற்கொலை முயற்சிக்கு ஆளாகி கவலைக்கிடமான நிலையில் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக நால்வரும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஜோதிகா மற்றும் அவரது 3 வயது மகன் ரித்திஷ் ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. கவலைக்கிடமான நிலையில், லட்சுமி மற்றும் ஜோதிகாவின் மூத்த மகன் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜோதிகாவுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், தங்களுக்கும் தொற்று பரவியிருக்கும் என்ற அச்சத்தாலும், குடும்ப வறுமை சூழலால் கரோனா சிகிச்சைக்கு அஞ்சியும் ஜோதிகா-லட்சுமி உள்ளிட்டோர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு பெண்களும் விஷப்பொருளான சாணிப்பவுடரை கரைத்துக் குடித்ததுடன், ஜோதிகாவின் 2 மகன்களுக்கும் கொடுத்துள்ளனர்.

கரோனா பரவலின் கோர முகங்களில் ஒன்றாக அரங்கேறியுள்ள இந்த தற்கொலை சம்பவம் மதுரை பகுதியை உலுக்கியுள்ளது. கரோனாவின் மூன்றாம் அலை நெருங்கி வரும் சூழலில், தொற்றின் வேகத்துக்கு இணையாக அது தொடர்பான அச்சங்களும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. உயிரிழப்பு அச்சம், மருத்துவ செலவினங்கள் குறித்த எளிய மக்களின் அச்சம், தான் உயிரிழந்துவிட்டால் குடும்பத்தினர் கதி என்னாகுமோ என்ற கவலை உள்ளிட்டவை இம்மாதிரி குடும்ப தற்கொலை முயற்சிகளுக்கு காரணமாகின்றன. கரோனா குறித்த விழிப்புணர்வு இவர்களை சென்று சேராததும் இவற்றுக்கு காரணமாக இருக்கலாம்.

எனவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் அங்கமாக, உடல் மட்டுமன்றி மனநலன் சார்ந்தும் கரோனா விழிப்புணர்வினை அரசு எடுத்துச்செல்வது அவசியமாகிறது. மக்களின் அலட்சியம் காரணமாக பரவல் அதிகரித்து வருகிறதே தவிர்த்து, கரோனா இரண்டாம் அலை அளவுக்கு தற்போதைய உடல்நல பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வீதம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தடுப்பூசியில் தொடங்கி இதர கரோனா தடுப்பு வழிமுறைகளை தீவிரமாக பின்பற்றினால் கரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். அப்படியே தொற்றினாலும் எளிய மக்களுக்கு இலவச கரோனா சிகிச்சையினை வழங்கி வரும் அரசு மருத்துவனைகளில் சேர்ந்து நலம் பெற்று திரும்பலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE