ஆர்எஸ்எஸ்சை சீண்டுகிறாரா பினராயி விஜயன்?

By என்.சுவாமிநாதன்

இந்துத்துவ எதிர்ப்பு நிலைப்பாட்டில் தீவிரமானவரான பினராயி விஜயன், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போதே “கேரளத்தில் கடந்த 2016 தேர்தலில் ஒரு தொகுதியில் ஜெயித்து பாஜக தன் கணக்கைத் தொடங்கியது. இந்தத் தேர்தலில் நாங்கள் அந்தக் கணக்கை முடித்து வைப்போம்” என முன்னறிவிப்பு செய்து அதன்படியே செய்தும் காட்டியவர்!

இதன் அடுத்த பாய்ச்சலாக, இதுவரை தான் பேசிய பல்வேறு உரைகள், எழுதிய கட்டுரைகளை எல்லாம், ‘ஆர்எஸ்எஸ்சுக்கு எதிராக இந்தியா’ என்ற தலைப்பில் புத்தகமாக தொகுத்திருக்கிறார் பினராயி. தமிழில் கி.ரா.சு மொழிபெயர்ப்பில், பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக இந்தப் புத்தகம் வந்திருக்கிறது.

பினராயி புத்தகம்

‘தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையுமே வலதுசாரிகள், இடதுசாரிகள் என்றே அடையாளப்படுத்த முயல்கின்றனர். மோடி சிலை உடைப்புகளுக்கு எதிராகப் பேசியிருக்கிறார். ஆனால், சமூகநீதிக்காகப் பேசிய பெரியார் சிலை உடைக்கப்பட்டபோதோ, லெனினின் சிலை உடைக்கப்பட்ட போதோ அப்படிப் பேசவில்லை; ஷாமா பிரசாத் முகர்ஜி சிலை உடைக்கப்பட்ட போதுதான் அப்படிப் பேசினார். பெரும்பாலான நேரங்களில் மோடி, தேர்ந்தெடுக்கப்பட்ட மவுனத்துக்குள் தன்னை பொருத்திக் கொள்கிறார்’ என்ற இந்த நூலின் பதிப்பாளரின் அனுபவப் பகிர்வே, ஆர்எஸ்எஸ்சைக் கூறுபோடுகிறது. அடுத்தடுத்து, பினராயி விஜயனின் எழுத்துகள் ஆர்எஸ்எஸ்காரர்கள் மறுத்துக் குரல் எழுப்பும் அளவுக்கான விவாதத்தின் தொடக்கப்புள்ளி!

ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த குந்தன் சந்திராவத், பினராயி விஜயன் தலைக்கு கோடி ரூபாய் விலை பேசியதாகவும் இந்தப் புத்தகம் பேசுகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரால் கேரளம் தொடர்ந்து குறிவைக்கப்படுவதை புள்ளிவிவரங்களோடு பட்டியல் இடுகிறார் பினராயி. ‘கேரளக் கூட்டுறவு வங்கியில் கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னீர்கள். வெயிலால் ஒரு குழந்தை இறந்தபோது சோமாலியாவோடு கடவுளின் தேசத்தை ஒப்பிட்டீர்கள். ‘கொலைக்களமான கேரளம்’ என சமூக வலைதளங்களில் பரப்பினீர்கள். இல்லாத லவ் ஜிகாத்தை ஊதிப் பெரிதாக்கிக் காட்டினீர்கள். கால்பந்து வெற்றிக்கொண்டாட்டத்தைக்கூட கேரளத்தில் ஒரு படுகொலையைக் கொண்டாடும் காட்சி என வைரல் செய்தீர்கள். ஆனாலும் கேரளத்தில் மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு எது நிஜம் எனத் தெரியும்’ என பினராயி விஜயன் இடதுசாரிகள் மீதான கேரள மக்களின் நம்பிக்கையை பறைசாற்றுகிறார்.

பினராயி விஜயன்

இந்தப் புத்தகத்தின் வழியே ஆர்எஸ்எஸ்சின் அடிப்படை சித்தாந்தங்களையே கேள்விக்குள்ளாக்குகிறார் பினராயி விஜயன். நாட்டு விடுதலையிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு அக்கறை இல்லை என்பது அவர் எழுப்பும் முக்கியமான விவாதம். அதுபற்றி புத்தகத்தில் பேசியிருக்கும் பினராயி விஜயன், ‘1925-ம் ஆண்டில் தொடக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கம், 1947-ம் ஆண்டில் நாடு விடுதலை அடையும்வரை ஆற்றிய பங்களிப்பு என எதுவும் இருக்கிறதா? வி.டி.சாவர்க்கரே வைஸ்ராயை நேரில் சந்தித்து, ‘சுதந்திரப் போராட்டத்தில் நாங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை’ என தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தையே காட்டிக்கொடுத்த பாரம்பரியம் அவர்களுடையது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது ஆர்எஸ்எஸ் இயக்கம் சில கிளைகளில் இனிப்பு வழங்கியது’ என குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்.

இதைவிட ஒரு படி மேலே போய், ‘முசோலினியின் பாசிச சித்தாந்தமே ஆர்எஸ்எஸ்சின் கட்டமைப்பு உருவாகக் காரணம் என்னும் வாதத்தையும் அழுத்தமாக முன்வைக்கிறார் பினராயி. 1930-களில் ஆர்எஸ்எஸ் தலைவர் மூஞ்சே இத்தாலிக்கு பயணித்தே இந்தக் கட்டமைப்பை உருவாக்கியதாக விளக்குகிறார். இதேபோல், ஹிட்லரின் நாசிசக் கொள்கையையே ஆர்எஸ்எஸ் தன் சித்தாந்தமாக உள்வாங்கியிருப்பதாகவும் விவாதத்தை எழுப்புகிறார்.

இந்தியா என்கிற பெயரையே ஆர்எஸ்எஸ் ஏற்றுக்கொள்ளாமல், இந்துஸ்தான் என வைக்கக்கோரியதாகவும், மூவர்ணக் கொடியை ஏற்றுக்கொள்வதிலேயே ஆர்எஸ்எஸ்சுக்கு சிக்கல் இருந்ததாகவும் சொல்லும் பினராயி விஜயன், ‘பெருமாள் முருகன் தன்னுள் இருந்த எழுத்தாளன் இறந்துவிட்டான் என அறிவித்ததன் பின்புலம் தொடங்கி, படைப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் பலர் கொல்லப்பட்டதுவரை அனைத்துமே வலதுசாரிகளின் அத்துமீறல் தான்’ எனவும் விவாதத்தை எழுப்புகிறார்.

பினராயி விஜயனின் இந்த நூலில் சினிமா வசனங்களை மிஞ்சும் சிலிர்ப்பூட்டும் வசனங்களும் உண்டு. ‘சமூகநீதியை நிலைநாட்டுவதில் கேரளம் 600 காம்ரேடுகளின் உயிரைப் பறிகொடுத்துள்ளது. அதில் 205 பேர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரால் கொல்லப்பட்டவர்கள்’ என்கிறார் பினராயி. ஒருமாநிலத்தின் முதல்வராக இருக்கும் பினராயி விஜயன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீது முன்வைக்கும் இந்தக் குற்றச்சாட்டு பெரும் விவாதத்துக்கு உரியது. ஆனால், இந்தப்புத்தகம் இப்போதுதான் தமிழுக்கு வந்திருப்பதால், இங்குள்ள சங் பரிவார் அமைப்புகளின் பார்வையில் இன்னும் சரிவரப் படாமல் இருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள இருந்தார் பினராயி விஜயன். ஆனால், அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்லி அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் என மத்தியப் பிரதேச அரசு கேட்டுக்கொண்டது. அதனால் அந்நிகழ்ச்சிக்கு அவர் செல்லவில்லை.

இதுகுறித்த தனது உரையையும் தனது நூலில் பதிவு செய்திருக்கும் பினராயி, ‘இளமைத்துடிப்போடு நான் கல்லூரியை முடித்த காலத்திலேயே நீங்கள் உருவிய கத்தியாலும், உயர்த்திப்பிடித்த கத்தியாலும் என்னை எதுவும் செய்யமுடியவில்லை. இப்போது என்ன செய்துவிட முடியும்? ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பதால், மத்தியப் பிரதேச அரசின் கோரிக்கைக்கு செவிசாய்த்தேன். அதே சாமானிய பினராயி விஜயனாக இருந்தால் நான் வருவதை இந்திரனோ, சந்திரனோ கூட தடுத்திருக்கமுடியாது’ என சாடி இருக்கிறார். அந்தப் பேச்சுத்தொனியில் ஒரு திரைப்பட நாயகனுக்கான பஞ்ச் வசனங்கள் போல் கூர்மை இருந்தாலும் பினராயி விஜயன் சொல் அல்ல செயல்! என்கின்றனர் தோழர்கள்.

இந்தப் புத்தகம் குறித்து, புத்தகத்தை பதிப்பித்திருக்கும் பாரதி புத்தகாலயத்தின் நாகர்கோவில் பொறுப்பாளர் குமரி எழிலனிடம் பேசினோம். ‘‘இந்தப்புத்தகம் வந்து 20 நாட்களுக்குள்ளேயே 100 புத்தகங்கள் போய்விட்டது. இத்தனைக்கும் இன்னும் அறிமுகக்கூட்டம்கூட நடத்தப்படவில்லை. எங்களுக்கு வந்த பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிட்டதால் கூடுதல் பிரதிகள் கேட்டிருக்கிறோம்” என்றார்.

மார்க்சிஸ்ட்கள் இந்த நூலை பிரதமாதமாகப் பேசினாலும், ஆர்எஸ்எஸ்காரர்கள், “கம்யூனிஸ்ட்களுக்கு என்ன வேலை...” என்ற ரீதியில் வாய் திறக்காமலேயே இருக்கிறார்கள். இதெல்லாம் ஏற்கெனவே பினராயி பேசிய கருத்துகள் தானே... புதிதாக ஒன்றும் இல்லையே என்ற மேம்போக்குப் பார்வையும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும், சர்ச்சையான தனது நூலை வெளியிட்டு கேரளத்தின் பேசப்படும் மனிதராகி இருக்கிறார் பினராயி விஜயன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE