பாஜகவையே சதாய்க்கும் சத்யபால் மாலிக்!

By எஸ்.எஸ்.லெனின்

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இவர்போல ஒரு ஆளுநர் இல்லை என்கிறார்கள். மத்திய ஆட்சிக்கும், அதை ஆளும் கட்சிக்கும் சிம்மசொப்பனமாக ஒரு மாநில ஆளுநர் களமாடுவது, இதற்கு முன்னர் இந்தியா பார்த்திராதது. அவர் மேகாலயா ஆளுநராக இருக்கும் சத்யபால் மாலிக்!

பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து சத்யபால் மாலிக் அண்மையில் தெரிவித்த கருத்துகள் புயலைக் கிளப்பி இருக்கின்றன. மாலிக்கைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதிதல்ல. அரசியலில் ஐம்பதாண்டு அனுபவம் கொண்ட 75 வயது மாலிக், பேசிப்பேசியே பாஜக தலைமைக்கு கொடுத்து வரும் குடைச்சல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

மாலிக் பேச்சைவிட, அதற்கு எதிர்வினையாற்றாது அமைதி காக்கும் கட்சித் தலைமை குறித்தே பாஜகவினருக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அதிகரித்து வருகிறது. யாரிந்த சத்யபால் மாலிக்? எங்கிருந்து இவருக்கு இத்தனை தைரியம் வந்தது, பாஜக தலைவர்கள் பல்லைக் கடித்துப் பொறுத்துப் போவதன் பின்னணி என்ன.. ஆகியவற்றின் பின்னே அரசியல் சுவாரசியங்கள் கணிசமாக இருக்கின்றன.

சர்ச்சைகளின் நாயகர்

சத்யபால் மாலிக் முன்பாக மைக் நீண்டாலே, பாஜக தலைவர்களுக்கு தலைவலியாகி விடும். பிரதமரை உரிமையுடன் பெயர் சொல்லியே அழைப்பார். மத்திய அரசின் செயல்பாடுகளையும், கொள்கைகளையும் கூட பட்டவர்த்தனமாய் விமர்சிப்பார். மனதில் தோன்றும் ஆட்சேபங்களை எல்லாம் பொதுவெளியில் போட்டுடைப்பார். மாலிக் ஒரு அரசியல்வாதியாக இருந்திருப்பின், இவையெல்லாம் இத்தனை முக்கியத்துவம் பெற்றிருக்காது.

ஆளுநர் இருக்கையில் வீற்றிருந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வீசுவதுதான் ஆட்சியிலும், கட்சியிலும் உள்ளோரை நெளிய வைக்கின்றது. அப்போதெல்லாம் அவரை ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கட்சியின் சாமானியர்கள் கண்டனக் குரல் எழுப்புவார்கள். ஆளுநராக்கியதன் மூலம், மாலிக்கை முடக்கிப்போட்ட அரசியல் ரகசியம் அறியாதவர்கள் அவர்கள். ஆனால், அதற்காக மோடி, அமித் ஷாவில் தொடங்கி பாஜகவினர் கொடுத்து வரும் விலையும் அதிகம்!

மோடியுடன் சத்யபால் மாலிக்

அடிமடியில் அடி

மோடி மற்றும் அமித் ஷா உடனான அண்மை சந்திப்பு குறித்து அளித்த பேட்டியில், எடுத்த எடுப்பிலேயே ”பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர்” என்றார் மாலிக். ’விஷ்வ குரு, பிரதான மக்கள் சேவகன்’ என்றெல்லாம் பார்த்துப்பார்த்துக் கட்டமைக்கப்படும் மோடியின் பிம்பத்தை சல்லியாய் நொறுக்கினார் சத்யபால். ”500 விவசாயிகள் உயிரிழந்தது குறித்து மோடியிடம் கேட்டபோது, ’அவர்கள் எனக்காகவா செத்தார்கள்..?’ என்றார் மோடி. ஆமாம், நீங்களல்லவா நாட்டின் பிரதமர் என்றேன். 5 நிமிட உரையாடல் சண்டையாக மாறிப்போனது” என்றார் மாலிக் படு யதார்த்தமாக.

தொடர்ந்து அமித் ஷாவை சந்தித்த மாலிக், தன்னிடம் பிரதமர் குறித்து உள்துறை அமைச்சர் விளித்ததாகக் குறிப்பிட்டிருப்பது அத்தனை ஆட்சேபகரமானது. மோடி - அமித் ஷா இடையேயும் முட்டல் உண்டாக்கவல்ல இந்தப் பேட்டியால் அரசியல் களம் அமளிதுமளியானது. எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொடிவைத்துப் போட்ட ட்விட்டால், மேலும் பற்றிக்கொண்டது. நண்பர்களின் அழுத்தங்கள் அதிகரிக்க, தான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கமளித்தார் மாலிக். எல்லாம் சில நாள்தான். பாஜகவுக்கு எதிராக அடுத்த அரசியல் குண்டை மாலிக் எப்போது வீசுவார் என்று அவருக்கே தெரியாது.

ஆளுநராக மாநில உலா

மாநில ஆளுநர்களாக நியமிக்கப்படுவோர் பெரும்பாலும் ஆளும் கட்சியின் சீனியராகவோ, அனுதாபியாகவோ இருப்பார்கள். உட்கட்சிப் பூசல்களைத் தவிர்க்கவும், அதிருப்தியில் உழலும் சீனியர்களைச் சரிக்கட்டவும் இம்மாதிரி ஆளுநராக்கி ’அழகு’ பார்ப்பார்கள். உத்தரப் பிரதேச பின்னணியில் சீனியரான சத்யபால் மாலிக்கை, கிட்டத்தட்ட கட்சியிலிருந்து கழித்துக் கட்டும் நோக்கத்துடனே அவருக்கான ஆளுநர் நியமனம் அரங்கேறியது. ஆனால், பாஜகவினரின் வியூகம் இந்த சீனியரிடம் செல்லுபடியாகவில்லை.

2017-ல் பிஹார் ஆளுநராக நியமிக்கப்பட்ட மாலிக், அங்கே பாஜகவுக்கு நெருக்கமான முதல்வர் நிதிஷ்குமாரின் நிம்மதியைக் கெடுத்தார். ஆளும்கட்சியுடன் சேர்ந்து பாஜகவினர் சிலர் நடத்திய பாலியல் முறைகேடுகளை தட்டிக் கேட்டதால், ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டார் மாலிக். அங்கே, தன்னைக் கலக்காது மாநில அந்தஸ்தைப் பறிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஆட்சேபித்த மாலிக்கை, கோவாவுக்கு அனுப்பினார்கள். அங்கேயும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முக்கியஸ்தர்களின் கனிம வள முறைகேடுகளைக் கேள்வி கேட்டார். உடனே மேகாலயாவுக்கு மாற்றினார்கள். அங்கிருந்தபடி, விவசாயிகளின் போராட்டங்களை தீவிரமாக ஆதரித்ததில் பிரபல்யமடைந்தார் மாலிக்.

இளம் அரசியல்வாதியாக சத்யபால் மாலிக்

சீனியர் சத்யபால்

இதர பாஜக தலைவர்கள் போல, இந்துத்துவ இயக்கங்களின் வழிவந்தவரல்ல சத்யபால். வி.பி.சிங் காலத்து அரசியல்வாதியாக பழம் தின்றவர். பல கட்சிகள் பார்த்தவரின் அனுபவ பின்னணியே, பாஜகவில் அவரது பலமும் பலவீனமுமாக மாறிப்போனது. எழுபதுகளில் மீரட் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவராக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த மாலிக், சரண்சிங்கின் ஆசியுடன் உபி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். அதன்பின் காங்கிரஸ் பக்கம் போனவர், ராஜிவ் காந்தி காலத்தில் அருண் நேருவுடன் இணக்கமாகி ராஜ்ய சபா எம்பியானார்.

காங்கிரசை விட்டு விலகிய வி.பி.சிங், ஜன் மோர்ச்சா மற்றும் ஜனதா தளம் என பயணித்தபோது அவருடன் தொடர்ந்தார் மாலிக். அலிகார் எம்பியாக அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து உபியிலும், டெல்லி அரசியலிலும் ஒருசேர பிரபலமானார். தொடர்ந்து காங்கிரஸின் எதிர்முகமாக அப்போது வளர்ந்து வந்த பாஜகவில் சங்கமித்தார். மோடி, அமித் ஷா ஆகியோர் டெல்லி அரசியலில் பிரவேசிக்கும் முன்பே, கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தார் மாலிக். அந்த பின்னணியும் அவரை இன்றுவரை காத்து நிற்கிறது.

விநோத அரசியல்

நிதர்சனத்தில் மாலிக்கின் மக்கள் செல்வாக்கு என்பது அரசியலுக்கும் அப்பாற்பட்டது. வட மாநிலங்களின் அரசியல் போக்கை நிர்ணயிக்கும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். விவசாயம், கால்நடை என மண்ணின் மக்களாக இருந்தவர்களிடம் கட்சிகளுக்கு அப்பால் செல்வாக்கு பெற்றிருந்தார். வாக்கரசியலில் ஈடுபடும் எவரும் கட்சியில் இவரைப் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். ஒரு ஆளுநராக இருந்தபடி, உபி பாக்பத்தில் விவசாயிகளுக்கான பேரணியை முன்னின்று நடத்திபோதும், டெல்லி எல்லையில் விவசாயிகள் இறந்ததற்கு சத்யபால் சாபம் விட்டபோதும் பாஜகவினர் மவுனித்திருந்தனர்.

சத்யபால் மாலிக்

“விவசாயிகள் பிரச்சினையைத் தீர்க்காது போனால், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும்” என்று சத்யபால் சீறியதை, அலட்சியப்படுத்தியவர்கள் பிற்பாடு அவர் வழிக்கு இறங்க வேண்டியதாயிற்று. மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கியபோது, சத்யபால் பெருமிதம் கொண்டார். ஆளுநராக இருந்தபடி விவசாய மக்களுக்காக மாலிக் நடத்திய விநோத அரசியல், அதன் சர்ச்சைகளுக்கு அப்பால் தனி வரலாறாகி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE