இளைஞர்களுக்கு தொழில்நுட்ப ஜவுளித்துறையில் பயிற்சி: கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

By இல.ராஜகோபால்

கோவை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில்நுட்ப ஜவுளித்துறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இந்திய பொருளாதாரத்தில் ஜவுளித்தொழில் ஒரு உன்னதமான இடத்தை பிடித்துள்ளது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக கிராமப்புற மக்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பு வழங்குவதில் ஜவுளித்துறை மிகப்பெரிய பங்களிப்பை கொண்டுள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழகத்தில் ஜவுளித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு துணிநூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (சிட்ரா) மூலம் 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மேற்படி பயிற்சியினை பெற விரும்புவோர் https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, மண்டல துணை இயக்குநர், ஜவுளித்துறை, 502, 5-வது தளம், மாவட்டஆட்சியர் அலுவலகம், திருப்பூர்- 641604 என்ற முகவரியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலும், rddtextilestpr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் 0421 2220095 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு விவரங்களைப் பெறலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE