உப்புத் தின்றவர் தண்ணீர் குடிக்க வேண்டும்: ராஜேந்திர பாலாஜிக்கு அமைச்சர் நாசர் அட்வைஸ்!

By கி.பார்த்திபன்

ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தது அதிமுகவினர் தான். ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. உப்புத் தின்றவர் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் பால் உற்பத்தி நிலையம், சென்னிமலை சாலையிலுள்ள ஆவின் தீவன உற்பத்தி தொழிற்சாலை ஆகிய இடங்களில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆவின் பணி நியமனங்களில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதற்காவே திமுக அரசு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் சட்டத்தை இயற்றி உள்ளது.

பொங்கலுக்கு என ஆவின் விற்பனை இலக்கு ஏதும் நிர்ணியிக்கப்படவில்லை பொங்கலுக்கு தமிழக அரசு 126 கோடி ரூபாய்க்கு ஆவின் நெய் கொள்முதலுக்கு உத்தரவிட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு பொங்கலுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்” என்றார்.

ராஜேந்திர பாலாஜி கைது நடவடிக்கை குறித்த கேள்விக்கு, “ அவர் மீது புகார் கொடுத்தவரே அதிமுகவினர் தான். உப்புத் தின்றவர் என்பதால் தண்ணீர் குடித்து உள்ளார். அவர் மீதான நடவடிக்கையில் சட்டம் தனது கடைமை செய்துள்ளது. ஆவினில் அதிமுக ஆட்சி காலத்தில் 734 பேர் முறைகேடாக பணியில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் ஆவின் நிர்வாக சீர்கேட்டில் மூழ்கிவிட்டது. அதை திமுக மீட்டுள்ளது. ஆவினில் 158 பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் அதிமுக ஆட்சியில் அவை நிறுத்தப்பட்டது. அதை மீண்டும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது" என்றார் அமைச்சர்.

இந்த ஆய்வின் போது அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE