ஜன.10-ல் பூஸ்டர் டோஸ்; முதல்வர் தொடங்கி வைக்கிறார்

By காமதேனு

தமிழகம் முழுவதும் இன்று 18-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஜன.10-ம் தேதி சென்னையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமை, முதல்வர் தொடங்கிவைப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தடுப்பூசி சிறப்பு முகாமை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வுசெய்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாகிறார்கள். இதன்படி ஏறத்தாழ 4 லட்சம் பேர் பூஸ்டர் செலுத்திக்கொள்ள இருக்கிறார்கள்.

இவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஜன.10-ம் தேதி தொடங்கும். இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, பட்டினப்பாக்கத்தில் தொடங்கிவைக்கிறார்.

மேலும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டதின்கீழ் கரோனா, கருப்பு பூஞ்சை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இணைய நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வருமான உச்சவரம்பிலிருந்து, தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 1,440 பத்திரிகையாளர்கள் பயன்பெறுவாரகள். இவர்களுக்கான சிறப்பு அடையாள அட்டையை முதல்வர் ஜன.10-ம் தேதி வழங்குவார்” என்றும் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE