சென்னை: ரயில் ஓட்டுநர்களுக்கு பணிக்குப் பிறகு எடுத்துக்கொள்ளும் 16 மணி நேர ஓய்வு, வார ஓய்வு ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும் என்று அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தெற்கு ரயில்வேயில் நாள்தோறும் பயணிகள் ரயில், சரக்கு ரயில் என மொத்தம் 1,322 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் இயக்கத்தில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்கள்) முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இவர்களுக்கு பணியை முடித்தபிறகு வழங்கப்படும் 16 மணி நேர ஓய்வு மற்றும் வார ஓய்வு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அவர்களின் உடல், மனநலம் பாதிக்கும் சூழல் உள்ளது.
மேலும், ரயில்வே பாதுகாப்பில் குறைபாடு ஏற்படும் அபாயசூழலும் உள்ளது. எனவே, அவர்களுக்கு பணிக்குப் பிறகு, 16 மணி நேர ஓய்வை முறையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து மத்திய அமைப்பு செயலாலர் அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் கழகத்தின் மத்திய அமைப்புச் செயலாளர் வெ.பாலச்சந்திரன் கூறியதாவது: குறைந்த பணியாளர்களை வைத்து அதிக வேலை வாங்குவது நிர்வாகத்தின் திட்டமாக உள்ளது. ரயில்வே ஓட்டுநர்களுக்கு பணிக்கு பிறகு ஓய்வு கட்டாயமாக இருக்கிறது.
ரயில்வே தலைமையகத்தில் இருக்கும் ஓட்டுநர்களுக்கு 16 மணி நேரம் ஓய்வும், வெளியிடங்களில் இருப்பவர்களுக்கு 8 மணி நேரம் ஓய்வும் இருக்கிறது. இதுதவிர, வார ஓய்வு 30 மணி நேரம் உள்ளது. ஒரு ஆண்டில் 365 நாட்களும் வேலையில் அமர்த்த எந்தச் சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை.
ரயில் ஓட்டுநர்களின் ஓய்வு நேரத்தை மறுப்பதால், அவர்களின் உடல், மன நலம், குடும்ப நலம் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே, பணிக்கு பிறகு, 16 மணிநேரம் ஓய்வு, வார ஓய்வு ஆகியவற்றை மறுக்கக்கூடாது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தலையிட்டு, பாதுகாப்பு மற்றும் ரயில் ஓட்டுநர்கள் உடல் மனநிலையை கருத்தில் கொண்டு இந்த நியாயமான கோரிக்கையை அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.