“கூட்டணிக்காக தமிழக விவசாயிகள் நலனை புறக்கணிப்பதா?” - அண்ணாமலை கண்டனம்

By துரை விஜயராஜ்

சென்னை: கூட்டணிக்காக தமிழக விவசாயிகள் நலனை புறக்கணிப்பதை முதல்வர் நிறுத்த வேண்டும் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: காவிரி நீரில், கடந்த ஆண்டு தமிழகத்துக்குக் கிடைக்கப் பெற்ற தண்ணீரின் அளவு 81.4 டிஎம்சி மட்டுமே. ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் பெற்றிருக்க வேண்டிய தமிழகம், அதில் பாதி அளவைக் கூட பெறவில்லை என்பது, திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.

திமுக காங்கிரஸ் சந்தர்ப்பவாத "இண்டி" கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகளின் நலனை மொத்தமாக அடகு வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். காவிரியில் குறித்த அளவு நீர்வரத்து இல்லாததால், இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி அன்று, விவசாயத்திற்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படாமல், பாசனத்துக்கு நீர் இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு இது குறித்த எந்தக் கவலையும் இல்லை. தன்னை ஒரு டெல்டாக்காரன் என்று கூறிவிட்டு, வயலில் கான்கிரீட் சாலை அமைத்து நடக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, விவசாயிகள் வேதனை எப்படிப் புரியும்? முதல்வர் ஸ்டாலின், தனது கூட்டணி நலனுக்காக, தமிழக விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு, உடனடியாக, காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE