தமிழகத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகளின் தொன்மை குறித்தும், அவை வெளிநாட்டுக்கு கடத்தப்படாமல் தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி, ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் முதல்வருக்கு மனு கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு வெளியே வந்த பின், தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "ஓய்வுபெற்ற பிறகு கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாக்கி உள்ளேன். 6 ஆண்டுகளாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றியதால், சிலைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து முழுமையாகத் தெரியும். ஓய்வுக்குப் பிறகு 290 கோவில்களுக்கு சென்று ஆய்வு செய்தேன். தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொன்மையான கோவில்கள் இருக்கின்றன.
இந்தக் கோவில்களில் பஞ்சலோகம், தங்கம், வெள்ளி உட்பட பல்வேறு வகையிலான 3 லட்சத்து 50 ஆயிரம் சாமி சிலைகள் இருக்கின்றன. இந்த சிலைகள் பாதுகாப்பாக இல்லை. இந்த சிலைகள் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. அந்தச் சிலைகள் தொன்மையா இல்லையா என்பதும் இதுவரை செய்யப்படாமல் இருக்கின்றன.
கடந்த 40 ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 10 சிலைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. நான் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்தபோது, சிலைகடத்தல் வழக்கில் சிக்கியவர்கள் வெளியே வரமுடியாதபடிக்கு கடுமையான வழக்குகளைப் போடுவோம். சாமி சிலைகள் மீட்கப்பட்டு இந்து சமய அறநிலைத் துறையிடம் ஒப்படைக்கப்படும்போது படம் எடுக்கப்படும்.
சாமி சிலைகள் கடத்தப்படுவது குறித்து விளிக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனு கொடுத்துள்ளேன். வீடியோ உரையாகவும் கொடுத்துள்ளேன். இந்தச் சிலைகள், கல்வெட்டுகளை பதிவுசெய்ய அரசு நடவடிக்கை எடுத்துக் காப்பற்றப்பட வேண்டும்.
சென்னை அரசு அருங்காட்சியகத்தில் சாமி சிலைகளை காட்சிப் பொருளாக வைத்து பணம் சம்பாதிப்பது எவ்வளவு அநியாயம். இதையெல்லாம் குறிப்பிட்டு தனிப்பட்ட முறையில்தான் முதல்வருக்கு மனு கொடுத்துள்ளேன். அரசு செய்யும் என நம்புகிறேன். நம்பிக்கை இருக்கிறது” என்று ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.