ஆளுநரின் வேந்தர் அதிகாரத்தில் கை வைக்கும் ஸ்டாலின்: விதை ஜெயலலிதா போட்டது!

By டி. கார்த்திக்

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா எடுத்த முடிவைப் போல ஸ்டாலினும் எடுக்க ஆளுநர் காரணமாகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஆளுநர்கள் கண்ணாமூச்சி ஆட்டம் என்பது காலங்காலமாக நடந்து வரும் நிகழ்வுதான். 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் நிழல் யுத்தம் நடைபெற்றுவருவதைப் பார்க்க முடிகிறது. உதாரணமாக, மேற்கு வங்கத்தில் ஆளுநர் - முதல்வர் இடையேயான மோதல் பிரசித்திப் பெற்றது. கேரளா, மகாராஷ்டிரத்திலும் இந்தப் போக்கு உண்டு. தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேற்கொண்ட ஆய்வுகள், கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. இதுபோன்று மாநில அரசுகளுடன் ஆளுநர்கள் மோதல் போக்கைக் கையாளும்போது, ஆளுநர்களுக்கு எதிர்ப்பைக் காட்ட சில நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்வதும் உண்டு.

இந்தியாவில் ஆளுநர்கள் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாகவும் இருக்கிறார்கள். மாநில அரசோடு மோதல் முற்றும்போது, அந்த அதிகாரத்தில் மாநில அரசுகள் கை வைக்கும் முடிவுகளை எடுக்கின்றன. மேற்கு வங்காளத்தில் வேந்தர் அதிகாரங்களை முதல்வருக்கு மாற்றுவோம் என்று வெளிப்படையாகவே எச்சரிக்கைகள் வந்தன. இந்நிலையில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பொதுப் பல்கலைக்கழகங்களின் சட்டத் திருத்த மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம் தேர்வுக்குழு பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்து மாநில அரசு பரிந்துரைக்கும் நபர்களில் ஒருவரை மட்டுமே துணைவேந்தராக ஆளுநரால் தேர்வு செய்ய முடியும் என்று மாற்றப்பட்டது. இதற்கு முன்பு வரை தேர்வுக் குழுவின் பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் ஆளுநர் தன் விருப்பப்படி ஒருவரை துணைவேந்தராக நியமித்தார். அந்த அதிகாரத்தில்தான் மகாராஷ்டிர அரசு கை வைத்துள்ளது.

அந்த மோதலில் ஒரு பகுதியாகத்தான் பல்கலைக்கழகங்களில் வேந்தரின் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில முதல்வருக்கு மாற்றி சட்டத் திருத்தம் கொண்டுவந்து அதிர வைத்தார் ஜெயலலிதா.

இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதும், தமிழகத்திலும் இதுபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. முந்தைய அதிமுக ஆட்சியில் சில துணைவேந்தர்களின் நியமனம் சர்ச்சையானது. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த சுரப்பாவைத் துணைவேந்தராக நியமித்தது விவாதமானது. மேலும் சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி நியமனம் பேசுபொருளானது. தேடல் குழுவுக்கு நியமிக்கப்பட்டவர்களே சர்ச்சையானதும் உண்டு. இந்தச் சூழ்நிலையில்தான், இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தின்போது, சட்டப்பேரவை பாமக குழு தலைவர் ஜி.கே.மணி, துணைவேந்தர்கள் நியமனம் குறித்து கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், “பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும்; இதுதொடர்பாக மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக்கொண்ட நிகழ்வில்...

முதல்வரின் இந்த அறிவிப்பு மூலம், மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி எடுத்த முடிவை திமுக அரசும் எடுத்துள்ளது எனக் கருதப்படுகிறது. ஆளுநரின் அதிகாரங்களில் மாநில அரசு கை வைப்பது புதிதல்ல. இதற்கெல்லாம் முன்னோடியாக ஜெயலலிதா அரசை உதாரணமாகச் சொல்லலாம். 1993-ல் தமிழக ஆளுநராக சென்னா ரெட்டி நியமிக்கப்பட்ட பிறகு அவருக்கும் - ஜெயலலிதாவுக்கும் இடையேயான மோதல், இந்திய அளவில் பிரபலமானது. 1993-ல் சென்னையில் இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தை ஆளுநர் சென்னா ரெட்டி ஆய்வு செய்தது முதல், மோதல் தொடங்கியது. அது கடைசியில் 1995-ல் ஜெயலலிதா மீது ஊழல் வழக்கை பதிய ஆளுநர் அனுமதி அளித்த பிறகும் நீடித்தது.

சென்னா ரெட்டி - ஜெயலலிதா மோதல் இடைப்பட்ட காலத்தில்தான் புத்தாண்டில் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆளுநர் உரை நிகழ்த்தாமல் கூட்டலாம் என்று மாற்றப்பட்டது. குடியரசு தினத்துக்கு ஆளுநர் கொடியேற்றும் விழாவை முதல்வர், அமைச்சர்கள் புறக்கணிப்பு, ஆளுநருக்கு எதிராக அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் போன்றவையெல்லாம் அந்தக் காலகட்டத்தில் பெரும் அரசியல் விவாதப் பொருளானது. அந்த மோதலில் ஒரு பகுதியாகத்தான் பல்கலைக்கழகங்களில் வேந்தரின் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில முதல்வருக்கு மாற்றி சட்டத் திருத்தம் கொண்டுவந்து அதிர வைத்தார் ஜெயலலிதா. ஆக, இதற்கு விதைப் போட்டவர் ஜெயலலிதா.

அந்த சட்ட மசோதா ஒப்புதல் பெற ஆளுநரின் கையொப்பத்திற்காகக் காத்திருந்தது. அந்த நேரத்தில்தான் 1996 சட்டப்பேரவைத் தேர்தல் குறுக்கிட்டது. தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுக அரசு மாறி மு.கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்தது. அந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி திமுக அரசு அழுத்தம் கொடுக்காததால், வேந்தர் அதிகாரம் மாற்றம் தவிர்க்கப்பட்டது.

குடியரசு தின அணிவகுப்பைப் பார்வையிடும் சென்னா ரெட்டி, ஜெயலலிதா

ஆனால், 25 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா எடுத்த முடிவைப் போல மகாராஷ்டிரா அரசும் எடுத்துள்ளது. அண்மையில் மேற்கு வங்காளத்தில் 24 பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசு, என்னுடைய ஒப்புதல் இல்லாமல் நியமித்துள்ளது என்று மாநில ஆளுநர் புலம்பினார்.

தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் மசோதாவுக்கு கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதாக ஆளுந்தரப்பு கோபத்தில் உள்ளது. துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆலோசனை, மாநில அரசின் கொள்கைக்கு மாறாக புதிய கல்வி கொள்கை குறித்து கல்லூரி முதல்வர்களுடன் கலந்துரையாடல் என ஆர்.என்.ரவியின் செயல்பாட்டில் அதிருப்தியில் இருந்தனர் திமுகவினர்.

இந்தச் சூழலில் ஜெயலலிதாவின் முடிவை ஸ்டாலினும் எடுக்கத் துணிந்துள்ளார் என்றே சொல்லலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE