அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கர்நாடக மாநிலத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். தனது வழக்கமான வெள்ளை, மஞ்சள் சட்டைகளுக்குப் பதில் டி.சர்ட் அணிந்து மீசையைக் குறைத்து கெட்அப்பை மாற்றியிருந்தும், தனிப்படை போலீஸார் அவரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்து விருதுநகர் கொண்டு வந்தனர்.
விருதுநகர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜியிடம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிந்து இன்று காலையில் அவர் ஸ்ரீவில்லிபுதூரில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பரம்வீர் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தரப்பில் வாதிட்டப்பட்டது. ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவானவருக்கு ஜாமீன் கொடுத்தால், மீண்டும் தலைமறைவாகும் வாய்ப்புண்டு என்று எதிர்ப்பு தெரிவித்த போலீஸார், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினார்கள்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராஜேந்திர பாலாஜியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஜனவரி 20-ம் தேதி மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அதற்குள்ளாக அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். ராஜேந்திரபாலாஜி மீது மேலும் பல புகார்கள் வந்துள்ளதால், அந்த வழக்குகளிலும் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.