தமிழகத்தில் நாளை முதல், இரவுநேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள்

By காமதேனு

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த கரோனா பாதிப்பு, அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் வெகுவாகக் குறைந்தது. இந்நிலையில், கடந்த நில தினங்களாக மீண்டும் தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் (ஜன.3) தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1,728 ஆக உயர்ந்தது.

இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவத் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாளை முதல், இரவு 10 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கரோனா தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொது, தனியார் பேருந்து சேவைகளுக்கும், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படவும் அனுமதிக்கப்படுள்ளது. பெட்ரோல் பங்குகள், ஏடிஎம் மையங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படலாம். ஐடி நிறுவனங்கள், உற்பத்தித் தொழிற்சாலைகள் இயங்கலாம். பணியாளர்கள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

பள்ளிகள் (1 முதல் 9 வரை) மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து, அனைத்துக் கல்வி நிலையங்களிலும் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மழலையர் காப்பகங்கள் தவிர மற்றவற்றுக்கு அனுமதி இல்லை. பொதுத் தேர்வுக்குச் செல்லும் 10, ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகள் நேரடியாக நடத்த அனுமதி.

அனைத்துக் கடைகளும் காலை 8 முதல் இரவு 10 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. பொதுப் போக்குவரத்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் 50 சதவீதப் பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் முழுமையாக மூடப்படும். கேளிக்கை பூங்காக்கள், பொழுது போக்கு பூங்காக்கள் செயல்பட அனுமதி இல்லை. அனைத்து கடற்கரையிலும் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி.

வெளி மைதானம், உள் அரங்க விளையாட்டுப் போட்டிகளை உரிய நெறிமுறைகளோடு 50 சதவீத பார்வையாளர்களோடு நடத்தலாம். பொங்கல் பண்டிகைக்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடு. புத்தகக் காட்சி, பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை.

ஜனவரி 9-ம் தேதி உட்பட ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின்போது மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி. பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவைகள் இயங்காது. உணவகங்களில் காலை 7 முதல் இரவு 10 வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி ஆகிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE