பணமோசடி வழக்கில் கடந்த 3 வார காலமாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி பண மோசடி செய்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நினைத்தவரின் முன்ஜாமீன் மனுவை, கடந்த டிச.17-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
அதைத்தொடர்ந்து கடந்த டிச.17 முதல் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல் துறை தெரிவித்தது. அத்துடன் அவரைப் பிடிக்க 8 தனிப்படைகள் காவல் துறை தரப்பில் அமைக்கப்பட்டன. இன்று இங்கே, நாளை எங்கே என போக்குக் காட்டிக் கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க இங்கிருந்து டெல்லி, பெங்களூரு, திருப்பதி, புதுச்சேரி மாநிலங்களில் தனிப்படையினர் சல்லடை போட்டுத் தேடினர். ஆனாலும் அவரைப் பிடிக்க முடியாமல் தனிப்படையினர் திணறினர்.
முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் அவரது உறவினர் வீட்டில் இருப்பதாக ஒரு தகவல் தனிப்படைக்குக் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படையினர் இன்று மதியம் 12. 45 மணியளவில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர்.
தங்கி இருந்த வீட்டிலிருந்து காரில் தப்பிய பாலாஜியை சுங்கச்சாவடி அருகே தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.