கோவையில் பரவும் டெங்கு

By காமதேனு

கோவையில் கரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், டெங்கு காய்ச்சலின் வேகமும் கூடிக்கொண்டே வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் நேற்றுவரை 32 குழந்தைகள் உட்பட 47 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகர் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மாநகரப் பகுதியில் வார்டுக்கு 15 பேர் வீதம் ஆயிரத்து 500 பேர் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுவதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன. மக்கள் தங்களின் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பால், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் மாவட்டம் வளையன்காடு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கோவை மாவட்டம் அன்னூர் அருகே எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (38) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE