அண்ணாசாலையில் முகக்கவசம் அணியாதோரிடம் முதல்வர் விழிப்புணர்வு!

By காமதேனு

தனது அரசுப் பணிகளின் இடையே அண்ணாசாலை வழியே சென்று கொண்டிருந்த முதல்வர் மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதைப் பார்த்து காரில் இருந்து இறங்கி தானே முகக்கசவத்தை அணிவித்தார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு பெருகிக் கொண்டுள்ள நிலையில், நேற்று பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசிப் பணியைத் தொடங்கிவைத்த முதல்வர், “தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அரசு இயக்கமாக மாற்றியிருக்கிறது” என்று பேசினார்.

அதைப் பேச்சாக மட்டும் நிறுத்திவிடாமல் இன்று நடைமுறைப்படுத்தியும் காட்டியிருக்கிறார் முதல்வர். அண்ணாசாலை வழியாக காரில் சென்றுகொண்டிருந்த முதல்வர், சாலையில் மக்கள் எந்த அளவுக்கு கரோனா நெறிமுறைகளை கடைபிடிக்கிறார்கள் என்பதை கவனித்தபடியே சென்றார்.

அப்போது, சென்னை அண்ணாசாலையில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய பொதுமக்களை கண்டதும் காரை நிறுத்தச் சொல்லி இறங்கினார். முகக்கவசம் அணியாமல் செல்லும் மக்களை அழைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகக்கவசம் வழங்கினார். மேலும், முகக்கவசம் அணியாமல் சென்ற ஒருவருக்கு தானே முகக்கவசத்தை அணிவித்தார். உடன் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியனும் மக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார்.

அண்ணாசாலையில் அண்ணா சிலை இருக்கும் பகுதியில் நடந்து சென்று முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம், முகக்கவசம் அணிந்தே தீரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முதல்வரே நேரில் வந்து தங்களுக்கு முகக்கவசம் வழங்கியதைப் பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் முதல்வருக்கு தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE