பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம்; முதல்வர் தொடங்கி வைத்தார்

By காமதேனு

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, மொத்தம் ரூ.1,088 கோடி செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று, ஏற்கெனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பில், 1. பச்சரிசி, 2. வெல்லம், 3. முந்திரி, 4. திராட்சை, 5. ஏலக்காய், 6. பாசிப் பருப்பு, 7. நெய், 8. மஞ்சள் தூள், 9. மிளகாய் தூள், 10. மல்லித் தூள், 11. கடுகு, 12. சீரகம், 13. மிளகு, 14. புளி, 15. கடலைப் பருப்பு, 16. உளுத்தம் பருப்பு, 17. ரவை, 18. கோதுமை மாவு, 19. உப்பு, 20. கரும்பு ஆகிய பொருட்கள் 21-வது பொருளான துணிப்பையில் போட்டு வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் ரேஷன் கடைகளுக்கு ஒட்டுமொத்தமாக கார்டுதாரர்கள் வந்துவிட்டால், கூட்டம் தள்ளுமுள்ளாகிவிடும் என்பதால், தினமும் 150 முதல் 200 பேர் மட்டும் பரிசுத் தொகுப்பை வாங்க வரும் வகையில் திட்டமிட்டு, அதற்கான தேதியுடன் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டோக்கன் விநியோகம் கடந்த 2 நாட்களாக நடைப்பெற்று வருகிறது.

நியாயவிலைக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பை இடைவிடாமல் தொடர்ந்து விநியோகம் செய்திட ஏதுவாக, நியாய விலைக் கடைகளுக்கான விடுமுறை தினமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதனால், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் காரணமாக ஜன.7-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

டோக்கன் வாங்கத் தவறியவர்கள் மற்றும் டோக்கனில் குறிப்பிட்ட தினத்தில் பொருட்கள் வாங்க முடியாதவர்கள், 10-ம் தேதிக்கு மேல் வாங்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE