தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள், மூடப்பட்டுவிட்டதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி செய்துள்ளார்.
2020-ம் ஆண்டின் இறுதியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என அறிவித்தார். மக்களின் அடிப்படை மருத்துவச் சேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த கிளினிக்குகளில் தலா ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இடம் பெற்றிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதற்காக 1,820 மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்படுவதாகவும், இதர மருத்துவ ஊழியர்கள் நிரவல் அடிப்படையில் நிரப்பப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இருக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களே ஆள்பற்றாக்குறை காரணமாக தள்ளாடி வந்த நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அம்மா மினி கிளினிக்குள் பெயரளவிலேயே செயல்பட ஆரம்பித்தன. மேலும் தலைவலி, காய்ச்சலுக்கு மாத்திரைகளும், சர்க்கரை, இரத்த அழுத்தத்துக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டதற்கு அப்பால் அங்கு மருத்துவ உதவி எதுவும் கிடைக்காது போயின. கரோனா பரவலின் மத்தியில் மக்கள் மத்தியில் அவை வரவேற்பிழந்தன.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதுமே அம்மா கிளினிக்குகள் மூடப்படுவதாக வெளியான தகவல்களை அடுத்து, திமுக - அதிமுக இடையே அறிக்கைப் போரும் நடந்தது. அதிமுக ஆட்சியின் திட்டங்களை திமுக அரசு இருட்டடிப்பு செய்வதாகவும், பெயர் மாற்றம் செய்வதாகவும் அதிமுக குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், தற்காலிக அமைப்பாகவே தொடங்கப்பட்ட அம்மா மினிக்கிளினிக்குகளின் ஆயுட்காலம் முடிந்ததாக, திமுக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(ஜன.4) அளித்துள்ள விளக்கத்தில், “அம்மா மினி கிளினிக் என்ற திட்டம் தொடங்கப்படும்போதே ஓராண்டுக்கான தற்காலிக அமைப்பு என்ற அறிவிப்புடனே வந்தது. 1,820 என்ற எண்ணிக்கையில் மருத்துவர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டனர்.
செவிலியர் மற்றும் மற்றும் உதவியாளர்கள் தனியாக நியமிக்கப்படவில்லை. இந்த மினி கிளினிக்குகள் செயல்பாட்டிலும் இல்லை. எனவே, மனிதாபிமான அடிப்படையில் மினிகிளினிக் மருத்துவர்கள் அனைவரும் கரோனா பணிகளுக்காக பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முழுமையாக மருத்துவத் துறையில் பணியமர்த்தப்படுவது குறித்து பின்னர் முடிவு எட்டப்படும். பெயரளவில் தொடங்கப்பட்டு செயல்படாத நிலையிலுள்ள மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டன” என்று தெரிவித்துள்ளார்.