துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிறுவன் மரணம்; விசாரணை அறிக்கை தாக்கல்

By காமதேனு

புதுக்கோட்டையில், துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியாரின் விசாரணை அறிக்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடந்த பயிற்சியின்போது தவறுதலாக வீட்டுக்குள் உணவருந்திக் கொண்டிருந்த 11 வயது சிறுவனின் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

உடனே சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், புதுக்கோட்டை மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். தொடர்ந்து, 5 நாட்களாக சிகிக்சை பெற்றுவந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தான். இதனால் சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், தற்காலிகமாக செயல்பட தடைவிதிக்கப்பட்டிருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தை, நிரந்தரமாக மூட வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழிலாக பாதுகாப்பு படையினர், தமிழக காவல் துறையினரிடம் கோட்டாட்சியார் தண்டாயுதபாணி விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பான கோட்டாட்சியாரின் விசாரணை அறிக்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE