அதிமுகவில் உறுப்பினரான உடனேயே மாநகராட்சி கவுன்சிலர், துணை மேயர் அடுத்த 5 ஆண்டில் எம்பி என்று விறுவிறுவென்று வளர்ந்தவர் இரா.கோபாலகிருஷ்ணன். மதுரை செல்லூரில் பிறந்தவர், தன்னுடைய அமைதி மற்றும் மந்தகாசப் புன்னகையால் புகழ்பெற்றவர். கட்சிப் பணியிலும் சரி, மக்கள் பணியிலும் சரி பெரிதாக ஆர்வம் இல்லாவிட்டாலும்கூட, தலைவர்களுடனான நெருக்கத்தைப் பேணிவந்தவர்.
இவருக்கு கவுன்சிலர் சீட் கொடுத்தபோதே, அதை எதிர்த்துப் போராட்டங்கள் எல்லாம் நடந்ததுண்டு. அப்படியானவர் ஜெயலலிதா, சசிகலா போன்றோரின் குட்புக்கில் இடம்பிடித்ததே குறுகிய காலத்தில் இவ்வளவு வேகமாக வளரக் காரணம். அந்த சசிகலாவையும், ஜெயலலிதாவையும் தூரத்தில் நின்றுகூட பார்க்க வாய்ப்புக் கிடைக்காத இவர், கண்கண்ட தெய்வமாகக் கருதியது ஓபிஎஸ்சைதான். ஓபிஎஸ் மதுரைக்கு வந்தால் விமான நிலையத்துக்கே போய் வரவேற்பு கொடுக்கும் ஓர் ஆத்மா உண்டு என்றால், அது கோபாலகிருஷ்ணன்தான். மதுரை மட்டுமல்ல, தூத்துக்குடி, திருச்சி என்று எங்கே போனாலும் அங்கேயும் போய் ஓபிஎஸ்சை வரவேற்று, அவரையே கூச்சப்பட வைத்துவிடுவார் மனிதர்.
ஜெயலலிதா இருக்கும்போதே, இவரை ஓரங்கட்டிய உள்ளூர் மாவட்டச் செயலாளர்களான செல்லூர் ராஜூ, ராஜன்செல்லப்பா போன்றோர் ஜெயலலிதா மறைந்த பிறகு இன்னும் பதம்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். “அமைதிப்படை சத்யராஜ் போல எம்பி ஆனவர்” என்று அரசு விழா மேடையிலேயே செல்லூர் ராஜூ இவரைப் போட்டுத் தாக்கியதுண்டு. இதுபற்றியெல்லாம் ஓபிஎஸ்சிடம் இவர் முறையிடுவதும், அதற்கு அவர், “பார்த்துக்கலாம் பார்த்துக்கலாம்” என்று சொல்லியே சமாளிப்பதும் வழக்கம். ஆனாலும், ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறவேயில்லை கோபாலகிருஷ்ணன்.
தர்மயுத்தக் காலத்தில், மதுரையின் மும்மூர்த்திகளான செல்லூர் ராஜூ, ராஜன்செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் எடப்பாடி பக்கம் நிற்க, முதல் ஆளாய் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு கொடுத்தார் கோபாலகிருஷ்ணன். மேலும் சில எம்பிக்களை ஓபிஎஸ் பக்கம் இழுக்க, இவர் தன்னுடைய கைக்காசை செலவழித்ததாகவும் பேச்சுண்டு. அந்த செல்வாக்கை எல்லாம் காட்டித்தான் ஓபிஎஸ் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியையும், துணை முதல்வர் பதவியையும் பெற்றதாகக்கூடச் சொல்வார்கள்.
எனவே, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், எப்படியும் நமக்கு சீட் வாங்கித் தந்துவிடுவார் என்று மலைபோல் நம்பினார் கோபாலகிருஷ்ணன். “எப்படியாச்சும் மதுரை சீட்டை வாங்கிக் குடுத்திடுங்க; எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஜெயிச்சுக் காட்டுறேன்” என்று சொல்லியும் வைத்திருந்தார் கோபாலகிருஷ்ணன்.
ஆனால், வேட்பாளர் பட்டியலில், ஓபிஎஸ்சை ஆதரித்த எந்த எம்பியின் பெயரும் இல்லை. ஆனால், தன் மகனுக்கு மட்டும் கட்சிக்குள்ளேயே இன்னொரு தர்மயுத்தம் நடத்தி சீட் வாங்கிக்கொடுத்திருந்தார் ஓபிஎஸ். “அவர் சுயநலவாதி என்று தெரியும், இந்த அளவுக்கு இருப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை” என்று வாய்விட்டுப் புலம்பியதோடு, கொஞ்சநாள் ஓபிஎஸ்சிடம் பேசாமல் கோபித்துக்கொண்டிருந்தார் கோபால். பிறகு, வழக்கம்போல ஓபிஎஸ் எங்கு போனாலும் வரவேற்கும் பக்தனாய் மாறினார். தென்மாவட்டம் என்றால் ஆர்.பி.உதயகுமார்தான் என்றான பிறகும்கூட, ஓபிஎஸ்சையும் ஒரு தலைவராக மதித்து அவர் பின்னாலேயே சுற்றிய மதுரைக்காரர்கள் வெறும் நான்கைந்து பேர்தான். அதில் முக்கியமானவர் நம்ம கோபாலகிருஷ்ணன்.
ஒரு கட்டத்தில் கட்சியில் தன்னுடைய முக்கியத்துவம் குறைகிறது என்று தெரிந்ததும், எடப்பாடியுடன் மல்லுக்கட்டி ஒன்றுக்கும் உதவாத வழிகாட்டும் குழுவை அமைத்த ஓபிஎஸ், அதில் தனது ஆட்களில் கணிசமானவர்களை உறுப்பினராக்கினார். அதில் மதுரை கோபாலகிருஷ்ணனும் ஒருவர். “அந்த வழிகாட்டுக்குழு கட்சிக்கு எந்த வழியும் காட்டியதாக வரலாறு இல்லை. முக்கிய பிரச்சினைகளில் அவர்களிடம் ஆலோசனை கேட்டதாகவும் தகவல் இல்லை. தன்னுடைய அந்த நேரப் பிரச்சினைக்காக சும்மா ஒரு குழுவை அமைத்துவிட்டு, எங்களை அம்போவென்று விட்டுவிட்டார்” என்று சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், ஓபிஎஸ் பற்றி சொல்லியது நினைவிருக்கலாம்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ்சிடம் சத்தியாக்கிரகம் நடத்தித்தான், மதுரை கிழக்குத் தொகுதி சீட்டை வாங்கினார் கோபாலகிருஷ்ணன். ஆனால், யாதவர்கள் அதிகமாக உள்ள தொகுதி என்றபோதும் திமுக வேட்பாளர் (அமைச்சர்) மூர்த்தியிடம் சுமார் 49 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். ஓபிஎஸ்சை நம்பி ஏமாந்த கோபாலகிருஷ்ணன், இதற்கு மேலும் இந்தக் கட்சியில் இருந்து என்ன செய்ய என்ற மனநிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:
ஓபிஎஸ்சை நம்பி வந்தவர்கள் என்ன ஆனார்கள்? -4 ஓபிஎஸ்சை நம்பி வந்தவர்கள் என்ன ஆனார்கள்? -4