புத்தாண்டில் துணை முதல்வராகிறார் உதயநிதி?

By டி. கார்த்திக்

“உதயநிதி எப்போது அமைச்சராகிறார்” இப்போதெல்லாம் உடன்பிறப்புகள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, மறக்காமல் கேட்கும் கேள்வி இதுவாகத்தானிருக்கிறது!

ஒரு பக்கம் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் வரிசைகட்டி முழங்குகிறார்கள். முதல்வரின் வீட்டுக்குள் இருந்தோ, அமைச்சராக அல்ல... உதயநிதியை துணை முதல்வராகவே ஆக்க வேண்டும் என்று அழுத்தம் வர ஆரம்பித்திருக்கிறது. கருணாநிதியால் படிப்படியாக வளர்க்கப்பட்டு, வார்க்கப்பட்டு முதல்வராக அமர்ந்திருக்கும் மு.க. ஸ்டாலின், இந்த விஷயத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற ஆவலில் உடன்பிறப்புகள் உள்ளனர்.

உதயநிதியின் கிடுகிடு அரசியல் கிராஃபை பற்றிப் பேசும் முன்பு, மு.க.ஸ்டாலினின் படிப்படியான அரசியல் கிராஃபை அலசுவோம். ஸ்டாலினின் அரசியல் எழுபதுகளில் தொடங்கியது. 1975-ல் மிசா கைதியாக சிறைக்குச் செல்லும் முன்பாகவே, கோபாலபுரப் பகுதி திமுக நிர்வாகியாக அரசியலை தொடங்கியவர் ஸ்டாலின். பிறகு, 1980-ல் தான் அவருடைய தலைமையில் திமுக இளைஞர் அணி உருவாக்கப்பட்டது. இதன்பிறகு திமுகவில் படிப்படியாக வளரத் தொடங்கிய ஸ்டாலின், தன்னுடைய முதல் தேர்தலை 1984-ம் ஆண்டில் ஆயிரம் விளக்கில் சந்தித்தார். அதாவது, அரசியலில் இறங்கிய பிறகு முதல் தேர்தலை ஸ்டாலின் எதிர்கொள்ளவே, ஒரு தசாப்தம் ஆகிவிட்டது. அந்த முதல் தேர்தலிலும் அவருக்குத் தோல்விதான் கிடைத்தது.

1989-ம் ஆண்டில் 2-ம் முறையாக மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டுத்தான் எம்எல்ஏ ஆனார் ஸ்டாலின். அப்போது தான், 13 ஆண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிக்குத் திரும்பியிருந்தது. திமுக அமைச்சரவையை சீனியர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். பொன்முடி, கே.என்.நேரு, சந்திரசேகரன் என ஜூனியர்களும் அமைச்சரவையில் இடம் பிடித்தார்கள். ஸ்டாலின் அமைச்சராவாரா என்ற முணுமுணுப்புக்கூட அப்போது எழவில்லை. 1996-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தபோதுதான், ஸ்டாலின் அமைச்சராவாரா என்ற கேள்வியே எழுந்தது. ஆனால், அப்போதும் ஸ்டாலின் அமைச்சராகவில்லை. அவரை அமைச்சராக்க வேண்டும் என்று சீனியர்கள் தொடங்கி எல்லோரும் கருணாநிதியை வலியுறுத்தினார்கள். ஆனால், கருணாநிதி மசியவில்லை.

கருணாநிதியுடன் ஸ்டாலின், துர்கா

மாறாக, சென்னை மாநகராட்சி தேர்தலில் களமிறக்கிவிடப்பட்டார் ஸ்டாலின். மேயர் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்ற பிறகு கருணாநிதி, ஸ்டாலினிடம் இப்படிச் சொன்னார். “எல்லாரும் சேர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள ஒரு சிறிய அறையில் உன்னை உட்காரவைக்க பார்த்தார்கள். நான் இவ்வளவு பெரிய பில்டிங்கில் (ரிப்பன் மாளிகை) உன்னை உட்கார வைத்திருக்கிறேன், பார்த்தாயா?” என்று கருணாநிதி பெருமையுடன் சொன்னார்.

பின்னர், ஸ்டாலின் 2006-ல் தான் முதன் முறையாக அமைச்சரானார். 2009-ல் மு.க. அழகிரி மத்திய அமைச்சரானார். மத்திய அமைச்சர் பதவி என்பது மாநில முதல்வர் பதவிக்கு இணையானது. அதையொட்டி, மு.க. ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியையும் கருணாநிதி வழங்கினார்.

அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி துணை முதல்வர் பதவியை அடைய ஸ்டாலினுக்கு 30 வருடங்களுக்கும் மேல் ஆனது. முதல்வர் பதவியை 67 வயதில் தான் அடைந்தார். ஸ்டாலினுக்கு தாமதமாகவே எல்லாப் பதவிகளும் கிடைத்தன. அந்த அளவுக்கு ஸ்டாலினை அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கினார். ஆனால், ஸ்டாலினின் வாரிசு உதயநிதிக்கு இதுவெல்லாமே தலைகீழ்தான். உதயநிதியின் அரசியல் பயணம் ஜெட் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. 2019-ல் அரசியலுக்கு வந்த உதயநிதி, எடுத்த எடுப்பிலேயே இளைஞர் அணி செயலாளர் பதவியைப் பிடித்தார். அடுத்த இரண்டே ஆண்டுகளில் எம்எல்ஏவாகவும் ஆகிவிட்டார். அடுத்து அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள் வரிசைகட்டி இழுக்கிறார்கள். இளைஞர் அணி பதவியை உதயநிதிக்கு வழங்க வேண்டும் என்றும் திமுக நிர்வாகிகள் இப்படித்தான் பேசினார்கள். அதுபோலவே அமைச்சராக்க வேண்டும் என்று ஆரம்பித்திருக்கிறார்கள்.

உதயநிதி

அதாவது, 1996-ல் கருணாநிதியிடம் அமைச்சர்களும் நிர்வாகிகளும் வலியுறுத்தியதைப்போல இப்போது ஸ்டாலினை அமைச்சர்கள் வலியுறுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஸ்டாலின் குடும்பத்துக்கும் உதயநிதிக்கும் மிகவும் நெருக்கமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்த பேச்சை, அமைச்சர்கள் வரிசையாக வழிமொழிந்து வருகிறார்கள். அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதை முதன் முதலில் தொடங்கி வைத்ததால், மற்ற அமைச்சர்கள் எல்லோருமே பதற்றமாகி விட்டார்கள். உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று சொல்லாவிட்டால் ஏதாவது குற்றமாகிவிடுமோ என்ற அளவுக்கு, வழிமொழியத் தொடங்கினார்கள். உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மீடியாக்களிடம் அமைச்சர்கள் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், முதல்வர் வீட்டிலும் அதுதொடர்பாக சீரியஸாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே கருணாநிதி ஆக்டிவாக இருந்த காலம் வரை, முதல்வர் பதவியும் தலைவர் பதவியும் ஸ்டாலின் பக்கம் வரவே இல்லை. 2016 தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும், உடனடியாக கருணாநிதிதான் முதல்வராகியிருப்பார். வயதையும் தாண்டி பதவிகள் தன்னிடம் இருக்க வேண்டும் என்பதில் கருணாநிதியும் உறுதியாக இருந்தார். அதனாலேயே ஸ்டாலினுக்குக் கிடைக்க வேண்டிய பதவிகள் எல்லாம் தாமதமாகவே கிடைத்தன. ஆனால், உதயநிதிக்கு அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்பதுதான், முதல்வர் வீட்டில் கிச்சன் கேபினெட்டின் எண்ணம் என்கிறார்கள்.

அதை நிரூபிக்கும் வகையில், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சர்கள் பேசும் வேளையில், ‘அவரை துணை முதல்வர் ஆக்குவது’ தொடர்பாக வீட்டுக்குள்ளேயே விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக திமுக தலைமைக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.

“தம்பி உதயா விவகாரம் தொடர்பாக தளபதி வீட்டில் விவாதம் நடந்தபோது, எடுத்த எடுப்பிலேயே ‘உதயாவை துணை முதல்வராக நியமித்தால் எந்தத் துறையை ஒதுக்குவீர்கள்’ என்ற கேள்வியை தளபதியிடம் அண்ணியார் கேட்டார். அப்படி கேட்டது தளபதிக்கு ரொம்ப தர்மசங்கடமாகிவிட்டது.

துர்கா ஸ்டாலின்

‘ஏற்கெனவே தம்பியை (உதயநிதி) இதுவரை சந்தித்துக் கொண்டிருந்தவர்களும் சந்திக்காதவர்களும், அவரிடம் பேச தினமும் காத்துக்கிடக்கிறார்கள். அவரை துணை முதல்வராக்கினால், அவர்கள் எல்லோரும் சந்தோஷமேபடுவார்கள்; யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். நம் வீட்டு வாசலில் ஒரு அரசு கார் நிற்பதற்கு பதில் இன்னொரு கார் நிற்கும். அது மட்டும்தான் மாறும்’ என்பதே அண்ணியாரின் வாதம்” என்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமான வட்டாரத்தில். அவர்கள் சொல்வதிலிருந்தே உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவதற்கு ஸ்டாலினின் வீட்டுக்குள் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பதை நம்மால் உள்வாங்க முடிந்தது.

இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்தான் கடந்த வாரம் கோவையில் பிரம்மாண்டமாய் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “அமைச்சர், துணை முதல்வர் பதவி போன்ற எந்தப் பொறுப்பு மீதும் எனக்கு ஆசை இல்லை. முதல்வருக்கும் கட்சிக்கும் உண்மையான தொண்டனாக மட்டும் இருப்பேன்” என்று ஒற்றை வரியில் சொன்னார்.

ஆனால், இந்த நிகழ்ச்சிக்காக உதயநிதியை வரவேற்று கோவை பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் ‘துணை முதல்வரே’ என்று விளித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களே பிரதானமாகத் தெரிந்தன. அமைச்சர் பதவியை விரும்பவில்லை என்று சொல்லும் உதயநிதி, தன்னை ‘துணை முதல்வரே’ என்று போஸ்டர் அடித்தவர்களைக் கண்டிக்கவில்லை.

கோவை நிகழ்ச்சியில்...

“கட்சிப் பதவிக்குள் நான் வரமாட்டேன்” என்று ஏற்கெனவே பேசிய உதயநிதி தான், பிற்பாடு கட்சிப் பதவிக்குள் வந்தார். அதுபோலவே அரசுப் பதவிக்கும் வருவார் என்கிறார்கள் உடன்பிறப்புகள். அதுமட்டுமல்ல... முதல்வர் ஸ்டாலினே முன்பு, “என் குடும்பத்தில் என்னைத் தவிர வேறு யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள்” என்று பேசியவர் தான். ஆனால், குடும்பத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாகவே அந்தப் பேச்சையும் அழித்துத் திருத்திக் கொண்டார் ஸ்டாலின். இந்த இடத்தில் திமுகவின் குடும்ப அரசியலை விமர்சிப்போர்கூட, ஸ்டாலினை அதிலிருந்து விலக்கி வைத்து பேசுவதைப் பார்க்கலாம். ஏனெனில், ஸ்டாலின் கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி படிப்படியாகத்தான் உயரங்களைத் தொட்டார்.

ஆனால், உதயநிதிக்கு அவை எல்லாமே எளிதில் கிடைப்பதைப்போல துணை முதல்வர் பதவியும் விரைவில் கிடைக்கும் என்கிறார்கள் திமுகவில். அதற்கான முதல் படியாகத்தான் கட்சி நிர்வாகிகள் வற்புறுத்துகிறார்கள் என்பதைக் காட்டிக்கொள்ளவே, அமைச்சர்கள் வரிசையாகப் பேசும் வைபவம். புதிய ஆண்டில் உதயநிதி பட்டத்து இளவரசாகவும் அரியணை ஏறுவது நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்!

பெட்டிச் செய்தி:

கனிமொழியுடன் மோதும் உதயநிதி!

திமுகவில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பாக, மகளிர் அணிச் செயலாளர் கனிமொழிக்கும் உதயநிதிக்கும் இடையே இரண்டாம் முறையாக உரசல் ஏற்பட்டிருக்கிறது. 2019-ல் இளைஞரணிக்குச் செயலாளர் ஆனதும், 30 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க உதயநிதி இலக்கு நிர்ணயித்தார். அதன் ஒரு பகுதியாக, அதிமுகவில் இளம் பெண்கள் பாசறை என்ற துணை அமைப்பு இருப்பதுபோல, திமுகவிலும் உருவாக்க நினைத்தார். 18 முதல் 30 வயதுள்ள இளம் பெண்களை அதில் சேர்க்கவும் தீர்மானித்தார். இளம் பெண்களை இளைஞரணியில் சேர்ப்பது மகளிரணிக்குப் பாதிப்பை உண்டாக்கும் என்பதால், அதைக் கனிமொழி எதிர்த்தார். ஸ்டாலினின் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டு சென்று, அந்த முயற்சிக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்டார் கனிமொழி.

கனிமொழி

இந்நிலையில்தான் கோவையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் 2 ஆயிரம் இளம் பெண்களை திமுகவில் சேர்க்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது கடைசி நேரத்தில் கனிமொழிக்கு தெரிய வர, “18 முதல் 30 வயதிற்குள்ளான இளம் பெண்களை நமது கழகத்தில் 'மகளிரணி உறுப்பினர்களாக' இணைத்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது” என்று அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டார். என்றாலும், நிகழ்ச்சி நடந்தேறியது. இந்த விஷயத்தில் மீண்டும் மீண்டும் உதயநிதி மூக்கை நுழைப்பதால், மருமகன் மீது அத்தையும் கோபத்தில் இருப்பதாக அறிவாலயத்தில் அலாரம் அடிக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE