சிவகங்கை: சொந்த கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது இல்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
சிவகங்கை பேருந்து நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதிதாகப் பொறுப்பேற்ற மத்திய அரசில் முக்கிய அமைச்சர்களாக பாஜகவைச் சேர்ந்தவர்களையே நியமித்துள்ளனர். குறிப்பாக, ஏற்கெனவே இருந்தவர்களே தற்போதும் அமைச்சர்களாகி உள்ளனர். கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியமில்லாத பதவிகளே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, கடந்த காலங்களைப் போலவே, இந்த முறையும் நல்ல திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாது.
கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வே அமைச்சரிடம் 49 மனுக்களை அளித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நபருக்கு மீண்டும் ரயில்வே அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். மக்கள் பிரச்சினையைத் தீர்க்கும் மனப்பான்மை மத்திய பாஜக அரசிடம் இல்லை. எனவே, மக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும்.
» திமுக - காங்கிரஸ் கூட்டணியில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது: செல்வப்பெருந்தகை கருத்து
நாங்கள் எதிர்க்கட்சியாக உத்வேகத்துடன் செயல்படுவோம். பொதுசிவில் சட்டம், குடியுரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த பாஜககூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், நாங்கள் கட்டாயம் எதிர்ப்போம். தமிழ்நாட்டில் காங்கிரஸ் இரண்டு முறை வென்றது கூட்டணிக் கட்சிகளால்தான். அதே நேரத்தில் சொந்த கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது இல்லை.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.
திமுக பிரமுகர்... முன்னதாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஆய்வு செய்தபோது அங்கு வந்த திமுக பிரமுகர் குமாரசாமி என்பவர், ‘‘மு.க.ஸ்டாலின் கூறியதால்தான் உங்களுக்கு வாக்கு அளித்தோம். ஆனால், சிவகங்கை வளர்ச்சி அடையாமல் அப்படியே இருக்கிறது. பேருந்து நிலையமே மிக மோசமாக இருக்கிறது என்றார். இதையடுத்து, அருகில் இருந்த காங்கிரஸார் குமாரசாமியை சமரசம் செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.