திமுக - காங்கிரஸ் கூட்டணியில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது: செல்வப்பெருந்தகை கருத்து

By KU BUREAU

சென்னை: தேர்தல் வெற்றியில் மு.க.ஸ்டாலினின் கடுமையான உழைப்பையும், பங்களிப்பையும் தமிழக காங்கிரஸ் மதிக்க தவறியதில்லை. இக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய்தாலும் அது நிறைவேறாது என கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தில், மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற கூட்டணிக்கு தலைமையேற்று கடுமையாக உழைத்து பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறுவதற்கான மு.க.ஸ்டாலினின் பங்களிப்பை தீர்மானத்தின் வழியே உறுதிப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நான் பேசும்போது, 'காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த கருத்தியல்தான் காமராஜர் ஆட்சி என்று குறிப்பிட்டேன். நமது கனவு மெய்ப்பட வேண்டுமென்றால் இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும். அதற்குஏற்ற வகையில் உரையாற்றுபவர்கள் கருத்துகளை கூற வேண்டும்' என கூறினேன்.

ஆனால், எனக்கு பின்னால் உரையாற்றியவர்கள் கூறிய சிலகருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. பொதுக்குழுவின் நோக்கம் என்பது காங்கிரஸை வலிமைப்படுத்துவது தான். அதேநேரத்தில், கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறமு.க.ஸ்டாலினின் கடுமையான உழைப்பையும், வெற்றிக்கான அவரது பங்களிப்பையும் எப்பொழுதுமே மதிக்க தவறியதில்லை. அவரது பங்களிப்பில்லாமல் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது.

ராகுல் காந்திக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் இடையே இருக்கிற கொள்கை சார்ந்த இணக்கத்தின் காரணமாகவே இந்தியா கூட்டணி தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதுதான் இந்தியாவிலேயே தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாமல் இருப்பதற்கு காரணம். அதனால் தான் தமிழகத்தில் மகத்தான வெற்றி பெற முடிந்தது.

எனவே, திமுக - காங்கிரஸ் கொள்கை சார்ந்த கூட்டணி. கடந்த 2003 -ல் தொடங்கி எஃகு கோட்டை போல் இருக்கும் இக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE