வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் விவாதித்தபோது, தன்னிடம் அவர் ஆணவத்துடன் நடந்துகொண்டதாக மேகலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து 380 நாட்களுக்கும் மேலாகப் விவசாயிகள் போராடிவந்த நிலையில், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக நவம்பர் 19-ல் பிரதமர் மோடி அறிவித்தார். நாடாளுமன்றத்திலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன.
இந்நிலையில், ஹரியாணாவின் சர்கி தாத்ரி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சத்யபால் மாலிக், “பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக அவரிடம் பேசினேன். அப்போது ஐந்து நிமிடங்களுக்காகவே இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதால் அந்தப் பேச்சை முடித்துக்கொண்டேன். அவர் மிகவும் ஆணவத்துடன் நடந்துகொண்டார். நமது விவசாயிகள் 500 பேர் இறந்துவிட்டனரே என்று சொன்னபோது, ‘அவர்கள் எனக்காகவா இறந்தார்கள்?’ எனச் சொன்னார் மோடி. ‘ஆமாம். நீங்கள்தானே அரசர்?’ என நான் சொன்னேன். அந்த விவாதத்தை முடித்துக்கொண்டேன். அமித் ஷாவைச் சந்தித்துப் பேசுமாறு என்னிடம் அவர் சொன்னார். அதன்படி அமித் ஷாவைச் சந்தித்தேன்” எனக் கூறியிருக்கிறார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளுக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை ரத்துசெய்வது குறித்து மத்திய அரசு நேர்மையாக முடிவெடுக்க வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ வரையறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் சத்யபால் மாலிக் வலியுறுத்தினார்.
"விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசு நினைக்கலாம். ஆனால், அது உண்மை அல்ல. விவசாயிகளின் போராட்டம் நிறுத்தித்தான் வைக்கப்பட்டிருக்கிறது. ஏதேனும் அநீதி நிகழ்ந்தால் போராட்டம் மீண்டும் தொடங்கும்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கையாண்ட விதத்தைப் பல முறை விமர்சித்தவர் சத்யபால் மாலிக். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் சீக்கியர்கள், ஜாட் சமூகத்தினரை அதிருப்தியடையச் செய்ய வேண்டாம் என்று நவம்பர் 7-ல் பிரதமரிடம் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், பின்னர் மேகாலயா ஆளுநரானார். டெல்லியில் உள்ள செல்வாக்குள்ள இரண்டு மூன்று நபர்களால்தான், தான் ஆளுநராக நியமிக்கப்பட்டதாக ஒருமுறை குறிப்பிட்ட அவர், “அவர்களின் விருப்பத்துக்கு எதிராகப் பேசுகிறேன் என்று எனக்குத் தெரியும். அவர்கள் கேட்டுக்கொண்டால் உடனே பதவிவிலகுவேன்” என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையே, சத்யபால் மாலிக்கின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மறுபுறம், இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன.