டெல்லி..கோலார்.. அடுத்து... ராஜேந்திர பாலாஜியின் கண்ணாமூச்சி?

By காமதேனு

இதோ இங்கே.. அதோ அங்கே.. என்று தலைமறைவாக இருக்கும் குற்றவாளியைப் பற்றி பல்வேறு ஊகங்கள் ஊரோடு உறவாடிக் கொண்டுதான் இருக்கும். அப்படித்தான் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்திலும் இருப்பதாகத் தெரிகிறது. அவரின் கண்ணாமூச்சி ஆட்டத்தை இறுதிக்கட்டத்துக்கு கொண்டுவர விருதுநகர் போலீஸின் தனிப்படை மும்முரமாக களமிறங்கி உள்ளதாகத் தெரிகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவினில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3. கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில், ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடுத்து ராஜேந்திர பாலாஜி ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உடனே தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை பிடிக்க, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ் தாஸ் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இச்சூழலில் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான நபர்களின் தொலைபேசி எண்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. பலரை நேரில் அழைத்து விசாரித்தனர். அதில் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் சீனிவாசன், சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், ராஜசிம்மன், கிருஷ்ணராஜ் ஆகியோர் அடங்குவர். மேலும் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை விக்னேஷ்வரன், கோடியூர் ஏழுமலை, தர்மபுரி பொன்னுவேல் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

கர்நாடகா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். ராஜேந்திர பாலாஜி தனது வழக்கறிஞர்களிடம் தொடர்ச்சியாகப் பேசி வருவதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஐபோன்களில் சிறப்பு ஆப் ஒன்றைப் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அங்கு செல்வற்குள் அவர் தப்பி விடுகிறார் என்று போலீஸார் சொல்கின்றனர். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலீஸையே ஏமாற்றுகிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ள நிலையில், விசாரணை வட்டம் விரிவடைந்தும் ராஜேந்திர பாலாஜியை இன்னும் கைதுசெய்ய முடியாமல் காவல் துறை கையைப் பிசைந்துகொண்டுள்ளது.

கடைசியாக டெல்லியில் முக்கிய பிரமுகரின் வீட்டில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீஸார் அங்கும் விரைந்தனர். ஆனால் சிக்கவில்லை. இந்நிலையில் கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலம் கோலாருக்கு நேற்று முன்தினம் ராஜேந்திர பாலாஜி தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்துள்ளதையடுத்து, தனிப்படை போலீஸார் கர்நாடகா சென்றுள்ளனர். தங்க வயல் கோலார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகாமிட்டுத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நேற்று அங்கே... இன்று இங்கே... நாளை எங்கே... என்று போலீஸை நன்றாக அலையவிடும் ராஜேந்திர பாலாஜியை இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் எப்படியும் பிடித்து உள்ளே தள்ள, போலீஸும் முழுமூச்சில் இறங்கி உள்ளதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE