மதுரை சர்வதேச விமானநிலைய அறிவிப்பு: மோடியின் பொங்கல் பரிசா?

By காமதேனு

மருத்துவக் கல்லூரிகள் திறப்பு மற்றும் பாஜக நடத்தும் மோடி பொங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க, ஜன.12 அன்று தென்தமிழகத்துக்கு வருகை தரவிருக்கிறார் பிரதமர் மோடி. அப்போது தமிழக மக்களுக்கான பொங்கல் பரிசாக, மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மக்கள் அறிவிக்கக்கோரி வருவதை நிறைவேற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் கோரி இரட்டைத் துப்பாக்கிகளாக செயல்பட்டுவருகிறார்கள், மதுரை மற்றும் விருதுநகர் மக்களவை எம்பிக்களான சிபிஎம் சு.வெங்கடேசன் மற்றும் காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்.

மத்திய அரசுக்கு தொடர்ச்சியான வலியுறுத்தல்கள், விவாதங்கள், துறை அமைச்சருக்கு நேரடி கேள்விகள், பத்திரிக்கையாளர் சந்திப்புகள், சமூக ஊடக பிரச்சாரங்கள் என தொடர்ச்சியாக 2 தமிழக எம்பிக்களும் போராடி வருகிறார்கள். ஆனபோதும் மத்திய அரசு அசைந்துகொடுக்க மறுக்கிறது. குஜராத்திலும், உபியிலும் புதிய விமானநிலையங்களுக்கு அடிக்கல், ஏற்கனவே செயல்பட்டு வரும் விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக அறிவித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு வருபவர்கள், மதுரை கோரல்களை செவிமெடுப்பதில்லை என்று புகார் வாசிக்கிறார்கள் இந்த எம்பிக்கள்.

தற்போது, மோடியின் மதுரை வருகையை ஒட்டி, விநோத வியூகமாய் பிரதமருக்கு நெருக்கடி தரவும் முடிவு செய்துள்ளனர். அதன் பொருட்டு தொடர்ச்சியான விவாதங்கள் மற்றும் விளக்கங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறும் எம்பி மாணிக்கம் தாகூர், ”பிரதமர் மோடி மதுரை வரும்போது, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதை பொங்கல் பரிசாக மக்களுக்கு அளிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

தமிழக எம்பிக்களின் நெருக்கடியால் இல்லாது போனாலும், பிரதமராக இருப்பவரின் அதிகாரபூர்வ பயணத்தின்போது அப்பகுதி மக்களுக்கான நலத்திட்ட அறிவிப்புகளின் வரிசையிலாவது மதுரை சர்வதேச விமானநிலைய கோரிக்கை பலிதமாகவும் வாய்ப்பிருக்கிறது. மதுரை மக்களின் நப்பாசை நிறைவேறுமா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE