அமைச்சர்களால் தடைபட்டு நிற்கும் கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமனங்கள்!

By கரு.முத்து

பொதுவாக வழக்கறிஞர்கள்தான் நீதிமன்றத்தில் தங்கள் கட்சிக்காரர்களுக்கு வாதாடுவது வழக்கம். ஆனால் கடலூர் மாவட்டத்தில், வழக்கறிஞர்களுக்காக கட்சிக்காரர்கள் அதுவும் அமைச்சர்கள் வாதாடி, போராடிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காக இவர்கள் செய்யும் அலப்பறைகளால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 7 மாதங்களாகியும் கடலூர் மாவட்டத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதில் இழுபறி தொடர்வதாக வருத்தப்படுகிறார்கள் வழக்கறிஞர்கள்.

கடலூர் மாவட்டத்தில் சீனியரான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் ஜூனியரான வெ. கணேசனும் அமைச்சர்களாக இருக்கின்றனர். அரசு வழக்கறிஞர்கள் நியமிப்பதில் இவர்களுக்குள் நிலவும் கருத்து மற்றும் அதிகார மோதலால் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் இழுபறி நீடிக்கிறது. இதனால் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களே இன்னமும் நீடிக்கிறார்கள். வழக்குகளில் அரசுக்கு பாதகமான தீர்ப்புகள் வந்துகொண்டிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் மாநிலத்தில் உள்ள நீதிமன்றங்களில் அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டு, மாவட்ட நீதிமன்றங்களில் அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் படிப்படியாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், கடலூர் மாவட்டத்தில் மட்டும் இந்த நியமனங்கள் இழுபறியில் நிற்கிறது.

கடலூர் மாவட்டம் திமுக கட்சி ரீதியில் கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் மூன்றைத் தவிர மீதமுள்ள நீதிமன்றங்களில் மொத்தம் 21 பேரை, (கடலூர் கிழக்கு மாவட்டத்தில் 12 பேர், கடலூர் மேற்கு 9 பேர்) நியமிப்பது தொடர்பான அறிவிப்பு கடந்த ஜூன் 16-ல் வெளியிடப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 30- க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலூர் மாவட்டத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞர் பதவிக்கு 249 பேர் விண்ணப்பித்தனர்.

பொதுவாக இந்த பதவிகளுக்கான வழக்கறிஞர்களை மாவட்ட அமைச்சர்களே பரிந்துரைப்பார்கள். அதனை அக்கட்சியின் வழக்கறிஞர் அணி பரிசீலித்து, தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று நியமனம் அறிவிப்பு வெளியாகும். கடலூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருப்பதால் இதில் யாருடைய சிபாரிசை கேட்பது என்பதில் தான் சிக்கல் என்கிறார்கள்.

அமைச்சர் வெ.கணேசன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள், “கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 21 அரசு கூடுதல் வழக்கறிஞர் பணியிடங்களில் 12 பேரை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வமும், மீதமுள்ள 9 பேரை மேற்கு மாவட்ட திமுக செயலாளரான அமைச்சர் வெ.கணேசனும் பரிந்துரை செய்யவேண்டும். அதன்படியே அமைச்சர் கணேசன் பரிந்துரைத்திருப்பதாகவும், அந்த பட்டியலில் எதுவும் சிக்கல் இருப்பதாக தெரியவில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது பரிந்துரை பட்டியலை அனுப்பவில்லையாம். காரணம், அவர் சிபாரிசு செய்யும் நபர்கள் பலர் மீதும் நீதிமன்ற வட்டாரத்தில் நல்லபெயர் இல்லை என்பதால் அவர்களை நியமிக்க வழக்கறிஞர் அணியினர் விரும்பவில்லை என்கிறார்கள்.

அமைச்சர்கள் பரிந்துரை செய்பவர்களை அப்படியே நியமித்துவிட மாட்டார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் நபர்கள் மீது நன்னடத்தைக் குறித்து மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற சார்புடையவர்கள் மற்றும் உளவுத்துறையினர் மூலம் அறிக்கை பெற்றே வழக்கறிஞர் அணி இறுதி பட்டியலை முதல்வரிடம் சமர்ப்பிக்கும். அப்படி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமிக்க விரும்பும் நபர்கள் மீது உளவுத்துறை அளித்த அறிக்கையும் திருப்திகரமாக இல்லை என்கிறார்கள். அதனால் வேறு நபர்களை பரிந்துரைக்கும்படி அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் அவர் இதுவரை பரிந்துரை பட்டியலை வழங்கவில்லை.

அதுமட்டுமில்லாமல், கணேசனின் கடலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நீதிமன்றத்துக்கும், நெய்வேலி நீதிமன்றத்துக்கும் தனது ஆதரவாளர்கள் சிலரை பரிந்துரைத்து அவர்களையே நியமனம் செய்யவேண்டும் என்றும் எம்ஆர்கே அழுத்தம் கொடுக்கிறார். இதுகுறித்து அமைச்சர் கணேசன வெளிப்படையாகவே தனது ஆதங்கத்தைக் தெரிவித்தும் எம்ஆர்கே பிடிவாதமாக இருக்கிறார்” என்று சொன்னார்கள்.

அமைச்சர்களுக்கு இடையிலான அதிகார யுத்தத்தால் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. “இந்த விஷயத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு பிரச்சினையை முடிக்காவிட்டால் அதிமுககாரர்களே கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக நீடித்து முக்கிய வழக்குகளில் அரசுக்கு பாதகமான தீர்ப்பை எழுத வைப்பார்கள்” என்கிறார்கள் கடலூர் மாவட்ட திமுக வழக்கறிஞர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE