சென்னையில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் 34 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகள் மரபணு மாற்ற சோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி பள்ளி அருகே, உயர் கல்வித் துறை பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் நீட் தேர்வுக்காக மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.
இங்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இந்த சிறப்புப் பயிற்சி வகுப்பில் படித்துவந்த மாணவர் ஒருவர், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டு, பயிற்சி மையத்துக்கு திரும்பியுள்ளார். அவருக்கு சளித் தொல்லை இருந்ததால் டிச.28 அன்று மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து, அங்குள்ள மாணவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு, நேற்று(டிச.31) முடிவுகள் வந்தநிலையில், மேலும் 33 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது.
கரோனா பாதித்த 34 மாணவர்களும் ஈஞ்சம்பாக்கம் கரோனா பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கரோனா மையத்துக்குச் சென்று மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்தப் பள்ளியில் 10 மாணவிகள் உட்பட 34 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்களின் குடும்பத்தாருக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மாதிரிகளில் மரபணு மாற்றம் கண்டறியும் பரிசோதனையும் நடந்து வருகிறது. தற்போது அனைவரும் நலமுடன் இருக்கின்றனர்” என்றனர்.
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,155 ஆக உயர்ந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.