தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் புத்தகக் காட்சி, பொருட்காட்சி ஒத்திவைத்து, கரோனா தொற்றுத் தடுப்பு கட்டுப்பாடுகளை ஜன.10 வரை நீட்டிப்பு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பண்டிகைக் காலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஒமைக்ரான் பாதிப்பைக் கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் முதல்வர் உத்தரவிட்டு வெளியிட்ட அறிக்கையில், “சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
மழலயைர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ம் வகுப்புவரை நேரடி வகுப்புகளுக்கு தடை. 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படும்.
வழிபாட்டுத் தலங்களில் தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும். திரையரங்குகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், அழகு நிலையங்கள், நகைக் கடைகள், துணிக்கடைகள், சலூன்களில். பொழுதுபோக்கு பூங்காக்கள், 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி, ஜிம்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% நபர்களுடன் செயல்பட அனுமதி.
அதுபோல திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 பேர், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50பேர்களுக்கு மிகாமல் அனுமதி. பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதி. மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.
அதேபோல அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. 60 வயதுக்கு மேற்பட்டோரையே ஒமைக்ரான் அதிக அளவில் தாக்குவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.