அரசு மருத்துவமனையில் எலி கடித்த பெண்ணுக்கு இழப்பீடு

By கி.மகாராஜன்

அரசு மருத்துவமனையில் எலி கடித்த பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த முத்துலட்சுமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2014-ல் தாக்கல் செய்த மனு:

‘மதுரையில் 19.1.2014-ல் நிகழ்ந்த சாலை விபத்தில் என் மகன் சுரேஷ் காயமடைந்தார். அதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது மகனுக்கு துணையாக நானும் மருத்துவமனையில் இருந்தேன். மகன் படுக்கை அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது, எனது இடது முழங்காலில் எலி கடித்தது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முறையாக பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதில்லை. இதனால் எலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எலி கடித்ததால் பாதிக்கப்பட்ட எனக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர், “மனுதாரர் ஜனவரி 23-ல் தன்னை எலி கடித்ததாகக் கூறுகிறார். அப்போது அதுபற்றி அவர் மருத்துவர்களிடம் தெரிவிக்கவில்லை. ஜன.31-ம் தேதிதான் சிகிச்சை பெற்றுள்ளார். மனுதாரர் உடலில் எலி கடித்ததற்கான காயம் இல்லை. மருத்துவமனை சுகாதாரத்தைப் பாதுகாப்பது தொடர்பாக ஆலோசனைக்குழு அவ்வப்போது ஆய்வுநடத்தி நிறைவேற்றி வருகிறது” என்றார்.

இதையடுத்து, “மருத்துவமனையில் தூய்மை மற்றும் சுகாதாரம் நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. எதிர்பாராமல் விபத்து நிகழும்போது இழப்பீடு வழங்க வேண்டும். இதனால், எலி கடிக்கு ஆளான மனுதாரர் இழப்பீடுபெற தகுதியானவர். மனுதாரருக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE