நீலகிரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு கொண்டாட்டங்களுக்குத் தடை

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால், நீலகிரி மாவட்டத்தில் சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள், தனியாருக்கு சொந்தமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் இன்று (டிச.31) இரவு முதல் ஜன.2-ம் தேதிவரை, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘'நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலாப் பயணிகள் ஏற்கெனவே வந்துள்ளனர். உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் இன்று இரவு நடத்தப்படும் ஆங்கிலப் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. வார இறுதி விடுமுறை என்பதால், ஜன.2-ம் தேதிவரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

அரசின் வழிகாட்டுதல்கள்படி, வழிபாட்டு தலங்கள் இரவு 11 மணிவரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். கேளிக்கை விடுதிகள் மற்றும் பொது இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. மேலும், சுற்றுலாத் தலங்கள் திறந்திருக்கும், சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் அணிந்து, கரோனா விதிமுறைகளைக் கடைபிடித்து அவற்றைக் கண்டு களிக்கலாம். கரோனா விதிமுறைகளைக் கடைபிடித்து பாதுகாப்பாக புத்தாண்டை மக்கள் கொண்டாட வேண்டும்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE