கணிப்புக்கு அப்பாற்பட்ட கனமழை: என்ன செய்ய வேண்டும் சென்னை?

By கோபாலகிருஷ்ணன்

நவம்பர், டிசம்பர் என்றாலே சென்னை மக்கள் பயத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். அந்த அளவு கடந்த சில ஆண்டுகளில் கடைசி இரண்டு மாதங்களில் சில நாட்கள் பெய்த மழை, வெள்ளம், புயல் ஆகியவற்றால் அச்சமடைந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அச்சங்கள் டிசம்பர் இடைப் பகுதிக்குள் விடைபெற்றுக்கொண்டுவிடும். 2004-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில்தான் சுனாமி தாக்கி பேரழிவுகளை ஏற்படுத்திச் சென்றது என்றாலும் அது மிக மிக அரிதான நிகழ்வே என்று சென்னை மக்கள் நம்புகின்றனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் நேற்று கனமழை பெய்திருக்கிறது.

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு, புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் போன்ற செய்திகளிலேயே மூழ்கியிருந்த பலரும், நேற்று காலை சில நாளிதழ்களில் ‘இன்று மழை பெய்யும்’ என்று சிறிய அளவில் வெளியிடப்பட்டிருந்த செய்திகளைக் கவனிக்கவில்லை. கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு முதல் பக்கத்திலோ பெரிதாகவோ அந்தச் செய்தியை நாளிதழ்களும் வெளியிடவில்லை. ஏனென்றால், மிகக் குறைவாகவே மழை பெய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மதியம் 12 மணி அளவில் மேகம் கறுக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மழை பெய்தது. ‘மார்கழியில் மழையா’ என்று முதலில் அனைவரும் அதிசயித்தினர். அடுத்த சில மணி நேரத்தில் எதிர்கொள்ளப்போகும் அதிர்ச்சியும் அவஸ்தைகளும் அப்போதும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

அதுவரை விட்டுவிட்டுப் பெய்துகொண்டிருந்த மழை, பிற்பகல் 3 மணியிலிருந்து தொடர்ந்து பல பகுதிகளில் கனமழையாகப் பெய்துகொண்டே இருந்தது. மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, அண்ணா சாலை, எழும்பூர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, மாம்பலம், அசோக் நகர், வடபழனி உள்ளிட்ட மத்திய சென்னைப் பகுதிகளில் இரவு வரை விடாமல் மழை பெய்துகொண்டே இருந்தது.

மாலை 5 மணியிலிருந்து அண்ணா சாலை, கடற்கரை சாலை உள்ளிட்ட பல பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது. தொடர் கனமழையால் கடற்கரை, சாலை அண்ணா சாலை உள்ளிட்ட சென்னையின் இதயப் பகுதி என அழைக்கப்படும் சாலைகளில்கூட இருசக்கர வாகனங்கள் பாதி மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் தேங்கியது.

மாலையில் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பிய பலர், ஒரு சில கிலோமீட்டர்களைக் கடக்கவே 2 மணி நேரம்வரை காத்திருக்க நேர்ந்தது. மழைநீர் உள்ளே புகுந்ததால், பல இடங்களில் இருசக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் நின்று போயின. விலையுயர்ந்த கார்களும் சாலைகளில் நின்றன. மேம்பாலத்தில் 2 மணி நேரம் காத்திருந்தது, எழும்பூர் முதல் ராயப்பேட்டைவரை பல பகுதிகளில் முழங்கால்வரை தேங்கிய தண்ணீரில் நடந்தபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தது என பல அவஸ்தைக் கதைகளைக் கேட்க முடிந்தது.

சிலர் முன்னெச்சரிக்கையாக இருசக்கர வாகனங்களை அலுவலகங்களிலேயே விட்டுவிட்டு ஆட்டோவிலோ டாக்ஸியிலோ பொதுப் போக்குவரத்திலோ வீட்டுக்குச் சென்றனர். அப்படிச் சென்றவர்களும் 2-3 மணி நேரம் கழித்தே வீடடைந்தனர். பலர் முன்னிரவில் கிளம்பி நள்ளிரவில் வீடு சென்று சேர்ந்தனர். வீட்டில் இருந்த குடும்பத்தினர் அதுவரை பரிதவித்துக்கொண்டிருந்தனர்.

நேற்று சென்னையின் பல பகுதிகளில் வரலாறு காணாத மழை அளவு பதிவாகியுள்ளது. மந்தைவெளியை அடுத்துள்ள எம்.ஆர்.சி நகரில் இரவு 8.30-க்கே 20 செ.மீ மழை பதிவானது. நேற்று ஒரேநாளில் பெய்த மழையின் அளவு டிசம்பர் மாதத்தின் சராசரி அளவான 177.4 மி.மீ என்னும் அளவைக் கடந்தது. அதோடு நேற்று பெய்த மழையின் மூலம் இந்த ஆண்டு பதிவான ஒட்டுமொத்த மழையின் அளவு 223 செ.மீ ஆனது. சென்னை மிகப் பெரிய வெள்ளத்தில் தத்தளித்த 2015-ம் ஆண்டில் பெய்த மழையின் அளவு 215 செ.மீ.

"சில மணி நேரங்களில் வானிலையில் மாற்றம் நிகழ்ந்து வளிமண்டல சுழற்சி சென்னையை நெருங்கியது. அதனால், கடலோரப் பகுதியில் உள்ள இடங்களில் சில மணி நேரத்தில் மழை கொட்டித் தீர்த்துவிட்டது. இந்த மழை மேகங்கள் அதிக உயரத்திலும் இல்லை” என்று கூறியிருக்கும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன், இதுபோன்ற வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பது சிரமம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜனவரி 3 வரை மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரேநாள் மழைக்கு 3 பேர் பலியாகியிருக்கின்றனர். ஒரு சில மணி நேர மழைக்கே சாலைகள் தண்ணீர்க் காடாவது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது போன்ற அவஸ்தைகள் இன்றுவரை தொடர்கின்றன. மழை நேரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பது உள்ளிட்ட அவலங்களும் இன்னும் தொடர்வது வேதனைக்குரியது.

புதிய ஆண்டிலாவது, சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழையின் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மழை என்றாலே சென்னை மக்கள் பீதியடையும் நிலை மாற வேண்டும்.

இதற்கான முதன்மைப் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றாலும் பொதுச் சமூகமும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். ஏரிகள் செல்லும் பாதையை அடைத்துக்கொண்டு வீடுகளைக் கட்டுவது, குப்பைகளைக் கண்ட இடத்தில் கொட்டுவது உள்ளிட்ட பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

நேற்று பெய்த கனமழை, எத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியாலும் இயற்கையின் செயல்களை ஓரளவுக்குமேல் கணிக்க முடியாது என்பதை மிக அழுத்தமாக நிரூபித்துள்ளது. அத்தகைய சக்தி வாய்ந்த இயற்கையை மதித்து, அதனுடன் இசைவான முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே இதுபோன்ற கொடிய பேரிடர்களிலிருந்து சென்னை மக்களுக்கு நிரந்தரமான விடிவைப் பெற்றுத்தரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE