சென்னை மழை: நள்ளிரவில் முதல்வர் ஆய்வு!

By காமதேனு

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(டிச.30), தஞ்சை மற்றும் திருச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், முடிவுற்ற பணிகள் திறப்பு மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை மாநகரில் 10 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. இதனால் மாநகரமே வெள்ளக்காடாகி சென்னை மீண்டும் தத்தளிக்க ஆரம்பித்தது. சாலைகளில் வெள்ளம், சுரங்கப் பாதைகள் மூடல், ஏராளமான வாகனங்கள் சாலையில் திரண்டதால் ஏற்பட்ட போக்குரவத்து நெரிசல் என நகரம் தடுமாறிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் வீடு திரும்பியிருந்த முதல்வர், நகரில் நிலவிய அசாதாரண சூழலை அடுத்து, நள்ளிரவு ஆய்வுக்கு கிளம்பினார். மழை பாதிப்பு பகுதிகள், அவை தொடர்பான மீட்பு நடவடிக்கைகள், மக்கள் உதவிக்கான ஒருங்கிணைப்பு பணிகள் உள்ளிட்டவற்றை விசாரித்து, பார்வையிடத் தொடங்கினார்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அவர் ஆய்வு மேற்கொண்டு, மழை பாதிப்பு மிகுதியாக இருக்கும் இடங்கள், மழைவெள்ளம் தேங்கிய பகுதிகள், மழையால் அடைக்கப்பட்ட சுரங்கப்பாதைகள், அவை தொடர்பான எச்சரிக்கைகள், தேங்கிய மழை நீரை வெளியேற்றுவதற்கான பணிகள் தொடர்பாக விசாரித்து அறிந்ததுடன், துரிதமாக பணிகளைத் தொடர அறிவுறுத்தினார். பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த பொதுமக்களின் புகார்களையும் செவிமடுத்தார்.

தொடர்ந்து ரிப்பன் மாளிகைக்கு வெளியே மழைவெள்ளம் சேர்ந்திருந்ததையும், அங்கு நடைபெற்று வந்த மழை நீரை வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து பெரியமேடு, என்எஸ்பி சாலை ஆகிய இடங்களிலும் மழைவெள்ளம் தேங்கியிருந்ததைப் பார்வையிட்டார். ஆய்வின்போது அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, செந்தில் பாலாஜி, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE