உலுக்கியெடுத்த மழை: ஓட்டல்களில் உணவு கிடைக்காமல் திண்டாடிய சென்னைவாசிகள்!

By காமதேனு

நேற்று பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் வசிப்பவர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் ஏராளம். ஆறாகப் பெருக்கெடுத்த வெள்ளத்தில் வாகனங்கள் தடுமாறி நின்றதுடன், போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் படாதபாடுபட்டனர். பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை இந்தப் போக்குவரத்து நெரிசல் நீடித்தது.

சற்று மேடான பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு ஏராளமானோர் காத்திருந்தனர். பலர் கிடைத்த இருசக்கர வாகனங்களில் லிஃப்ட் கேட்டு ஏறிச் சென்றனர். சென்னை வேப்பேரியில், மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் அருகே இரண்டு கார்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்திருக்கிறது. எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றும் சாலையில் மழைநீர் தேங்கிக்கிடக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் இன்றும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

கனமழை எதிரொலி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (டிச.31) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பணிகள் தவிர அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று மூடப்பட்டிருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இந்தச் சூழலில், போக்குவரத்து நெரிசலில் ஏராளமானோர் சிக்கித் தவித்ததையும் மனதில் வைத்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இரவு நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல், களைப்பு ஆகியவற்றைத் தாண்டி பலரும் பசியால் வாடினர். நீண்ட நேரம் சாலையில் காத்திருந்த வாகன ஓட்டிகள் கிடைத்த உணவகங்களில் உணவுகளை வாங்கிப் பசியாறியிருக்கிறார்கள். இதனால், விரைவிலேயே பல ஓட்டல்களில் உணவுவகைகள் காலியாகிவிட்டன. சென்னையில் நடைபாதை உணவகங்கள் அதிகம். கனமழை காரணமாக அவை மூடப்பட்டன. இதனால் பலர் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

பலர் வீடுதிரும்ப முடியாமல் அலுவலகங்களிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. வீடு சென்று சேர்ந்துவிடலாம் என்று கிளம்பிய பலர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, இரவு 11 அல்லது 12 மணிக்குத்தான் வீடு திரும்ப முடிந்தது. இதைக் கருத்தில் கொண்டு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அரசுப் பேருந்துகளும் இயக்கப்பட்டதால், ஓரளவு நிலைமையைச் சமாளித்தார்கள் சென்னைவாசிகள்.

சென்னை கனமழைக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE