இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 68 மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் 11 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தத்தைத் தற்காலிகமாக கைவிட்டிருப்பதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்திய கடல் எல்லையைக் கடந்துவந்து, இலங்கை கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதாக மீனவர்கள் கைது செய்தி வருவது வழக்கமாகவே இருக்கிறது.
அண்மையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68மீனவர்களை விடுவிக்கக் கோரியும், இலங்கை கடற்படையினரைக் கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களோடு மண்பம் மீனவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த 68 மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமநாதபுரம் வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்த மனு தற்போது விசாரணையில் உள்ளது. தவிர, இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் உள்ளிட்டோர் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை அழைத்து, மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வரும் 7-ம் தேதிக்குள் வெளியுறவுத் துறை அமைச்சரை மீனவப் பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் உறுதியளித்தார்.
அதை ஏற்று, மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். மேலும், நாளை(ஜன.1) நடத்த இருந்த ரயில் மறியல் போராட்டத்தையும் கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ஜன.3-ம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதாக மீனவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.