பண மோசடி வழக்கில் தலைமறைவாகிய, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வரிசையாக மோசடிப் புகார்கள் வந்து குவிகின்றன. இந்நிலையில் மதுரை ஆவினில் ரூ.30 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி செய்ததாக 2 வழக்குகள் பதியப்பட்டதில், அவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அன்றிலிருந்தே(டிச.17) ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதாக விருதுநகர் எஸ்பி அறிவித்தார்.
தொடர்ந்து 8 தனிப்படைகள் தேடியும் சிக்காத ராஜேந்திர பாலாஜி, தனது முன்ஜாமீன் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய, தமிழக அரசு கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது; காவல் துறை லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியது. இருந்தும் அவரைக் கைது செய்ய முடியாமல் காவல் துறை திணறி வருகிறது.
ராஜேந்திர பாலாஜியின் மீது மேலும் பல புகார்கள் குவிந்துவரும் நிலையில், 2 வாரங்களாக தலைமறைவாக உள்ளவருக்கு அதிமுகவினர் சிலர் உதவி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல்கள் கிடைக்க, திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த 2 அதிமுகவினரை தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, கும்பகோணத்தைச் சேர்ந்த 2 பேரிடம் மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.21 லட்சம் மோசடி என புகார் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுபோக, மதுரை ஆவினில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வுசெய்ததில் திருப்பதி லட்டு தயாரிப்புக்கு நெய் அனுப்பியது தொடர்பாகவும், தனியார் நிறுவனங்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் நெய் விநியோகம் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளதாகத் தகவல் வெளியானது.
மதுரை ஆவினில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில், 2019-20-ல் ரூ.30 கோடிக்கு தரமற்ற இயந்திரங்கள் வாங்கி மோசடி செய்யப்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மோசடியிலும் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கிறது.
தற்போது ராஜேந்திர பாலாஜி, டெல்லியில் பாஜக பிரமுகர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும், தர்மபுரி அருகே சேலூர் அம்மாபாளையம் மலைகிராமத்தில் ராஜேந்திர பாலாஜி பதுங்கி இருக்கிறார் என்றும் ஒரு வதந்தி உலவிக் கொண்டிருப்பதால், அவரைப் பிடிக்க உள்ளூர் போலீஸும் தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.