மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி இல்லை; ஆங்காங்கே சூரிய மின் உற்பத்திப் பூங்கா

By காமதேனு

மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்றும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான மின் உற்பத்திக்காக அந்தந்த மாவட்டத்திலேயே, சூரிய மின் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

திமுக அரசு மக்களுக்கான மின்கட்டணத்தில் மறைமுகமாக ஜிஎஸ்டி வசூலிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பல கட்சியினரும் குற்றம்சாட்டிவருகிறார்கள்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: “விவசாயிகள் நலனில் தனி அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் 4.50 லட்சம் மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கும் பொருட்டு, முதல் ஆண்டிலேயே ஒரு லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மின் துறையில் இதர பணிகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் என்பது கடந்த ஆட்சியில் (2018) இருந்தே கொண்டு வரப்பட்டதுதான். புதிதாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதைப் போல எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் கூறிவருகிறார்கள். மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

கடந்த ஆட்சியில் மின் உற்பத்தி 53 சதம் மட்டுமே. மேலும், 2017-ம் ஆண்டிலேயே விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்துவது தொடங்கப்பட்டது. இப்போதுதான் மீட்டர் பொருத்தப்படுவதுபோல ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கான மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டாலும், தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கவும் அதற்கான மானியத்தையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. மின்மாற்றிகளில் டிபி மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு, வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

சென்னை மாநகராட்சியில் பூமிக்கடியில் மின்பாதை அதிகப்படுத்தப்பட்ட பிறகு, மற்ற மாநகராட்சிகளுக்கு முதல்வர் அனுமதியோடு விரிவுபடுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான மின் உற்பத்திக்காக அந்தந்த மாவட்டத்திலேயே சூரிய மின் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE