‘ஹம் தோ, ஹமாரே தோ’ என்ற வகையில் மோடி, அமித் ஷா ஆகிய இருவர், அம்பானி, அதானி ஆகிய இருவருக்காக மட்டுமே செயல்படுகின்றனர் என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஊழியர் கூட்டம் இன்று உதகையில் நடந்தது. இதில், சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “காங்கிரஸ் கட்சி இப்போது பலவீனம் அடைந்துள்ளது. இதில், எல்லோருக்கும் கவலை உண்டு. இரண்டு தேர்தல்களிலும் 100 தொகுதிகளில் கூட வெற்றிபெற முடியவில்லை என்பது பலவீனத்தைக் காட்டுகிறது. கட்சியை பலப்படுத்த வேண்டும். மாவட்டந்தோறும் தேர்தல்கள் மூலம்தான் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும், அதேபோல் வேட்பாளர்களின் தேர்வும் இருக்க வேண்டும்.
பாஜகவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுதிரள வேண்டும். கர்நாடகாவில் கொண்டுவரப்பட்ட மதமாற்ற சட்டம் மிகவும் ஆபத்தானது. இந்தச் சட்டத்தில் உள்ள பிரிவுகள் மூலம், இலவச கல்வி கொடுக்கும் பள்ளிகள் மீதும் மதமாற்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
இது கிறிஸ்துவர்களை அச்சுறுத்தக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல, அன்னை தெரசா அறக்கட்டளையின் கணக்குகளை முடக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இஸ்லாமியர்களை மட்டுமல்ல கிறிஸ்துவர்களையும் முடக்குவோம் என்று இதன் மூலம் சுட்டிக்காட்டுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் மதம் என்பது தனிநபர் விருப்பு, வெறுப்பு உடையதாகும். அரசு எந்த மதத்தையும் சார்ந்திருக்கக்கூடாது. தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுகிறது, முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்புடன் முழு திருப்தியோடு பணியாற்றுகிறார்.
மோடி அரசிடம் சிறந்த நிர்வாகம் இல்லை. ‘ஹம் தோ, ஹமாரே தோ’ என்ற வகையில் மோடி, அமித் ஷா ஆகிய இருவரும் அம்பானி, அதானி ஆகிய இருவருக்காக மட்டுமே செயல்படுகின்றனர்.
உலகில் எந்த நாட்டிலும் ஒரே நிறுவனத்துக்கு, விமான நிலையம், துறைமுகம், மின்சாரம் ஆகியவற்றை கொடுக்க மாட்டார்கள். ஒரு கம்பனிக்கு ஏர்போர்ட் கொடுத்தால் வேறு கம்பனிக்கு துறைமுகம் டெண்டரை கொடுப்பார்கள். ஆனால் மோடி, அதானிக்கு மட்டும் அனைத்து துறைகளையும் கொடுத்து வருகிறார்.
இப்போது இருக்கும் மோடி அரசால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது. கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும் இங்கு விலை குறையாது. அதற்குக் காரணம் அரசுக்குத் தேவையான வரி. கரோனா காலகட்டத்தில் லாக்டவுன் காரணமாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்தது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மூலம் வரி விதித்து அனைத்து மக்களிடமிருந்தும் வரியை வசூலித்து வருகின்றனர்” என்று அவர் கூறினார்.
கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் விவேக் லஜபதி, அகில இந்திய காரிய கமிட்டி உறுப்பினர் ஜே.பி.சுப்மணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.