'பாட்ஷா' படத்தில் ஒரு காட்சி. மருத்துவ சீட் மறுக்கப்பட்ட தன்னுடைய தங்கைக்காக ரஜினி, கல்வித்தந்தை ஒருவரிடம் கை கட்டி நிற்பார். இதை அப்படியே மாற்றி யோசியுங்களேன். கெஞ்சி சீட் வாங்கிய மாணவி பிற்காலத்தில் அதைப்போல ஒரு மருத்துவக் கல்லூரியே கட்டிவிட... அந்த கல்வித்தந்தையோ போண்டியாகி, தன்னுடைய மகனுக்கு சீட் கேட்டு அதே மாணவி முன் நின்றால் எப்படியிருக்கும்? அந்த மாணவி ஓபிஎஸ் என்றால், அந்தக் கல்வித்தந்தை எஸ்.டி.கே.ஜக்கையன்!
ஓபிஎஸ் பெரியகுளம் நகர அதிமுக செயலாளர் ஆகும் (1993) முன்பே, அதிமுகவின் மாநில நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் எஸ்.டி.கே.ஜக்கையன். ஓபிஎஸ் நகராட்சித் தலைவராவதற்கு (1996) 14 வருடங்களுக்கு முன்பே, அதிமுக எம்பியாக எம்ஜிஆரால் அங்கீகரிக்கப்பட்டவர் எஸ்.டி.கே.ஜக்கையன்.
1982-ல் பெரியகுளம் எம்பியாக இருந்த திமுகவைச் சேர்ந்த கம்பம் நடராஜன் திடீரென மறைந்துவிட, இடைத்தேர்தல் வந்தது. அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் தேர்வு செய்த வேட்பாளர்தான் ஜக்கையன். தன்னைப் பக்கத்தில் நிறுத்திக்கொண்டு எம்ஜிஆரே, ஊர் ஊராய்ப் பிரச்சாரம் செய்த வரலாறு ஜக்கையனுக்கு உண்டு. அப்போது எம்ஜிஆரை எங்கோ கூட்டத்தில் எட்டி நின்று பார்த்தவர்தான் ஓபிஎஸ்.
அதே எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில், தமிழக அரசுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்ற அந்தஸ்தும் ஜக்கையனுக்குக் கிடைத்தது. 1989 சட்டப்பேரவைத் தேர்தலில், ஜெ அணிக்கான தேனி தொகுதி வேட்பாளராக ஜக்கையன் களமிறங்கியபோது, போடி வேட்பாளர் ஜெயலலிதா. அம்மாவின் போடி தொகுதியையும் சேர்த்துக் கவனிக்க வேண்டியதிருந்ததால், அப்போது தனது தொகுதியைக் கோட்டைவிட்டார் ஜக்கையன். ஆனால் அப்போது, ஜானகி அணியின் தீவிர ஆதரவாளராக ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்சை நம்பி ஏமாந்தவர்கள் கதை தெரியும். யாரைப் பார்த்து வளர்ந்தாரோ, அவரையும் சாய்த்தவர் ஓபிஎஸ் என்பதைச் சொல்லும் தொடர் கட்டுரை இது என்பதால்தான் இந்த 'ஃப்ளாஷ்பேக்'.
தூரத்தில் நின்று தனக்கு பவ்யமாக கும்பிடுபோட்ட ஓபிஎஸ், 2001 தேர்தலில் டி.டி.வி.தினகரனின் ஆதரவுடன் முதல்முறையாக எம்எல்ஏவாகி, உடனே வருவாய்த் துறை அமைச்சர், சில மாதங்களிலேயே இடைக்கால முதலமைச்சர் என்று விறுவிறுவென்று வளர்ந்ததை ஜக்கையன் வியப்போடு பார்த்தார். சென்னையில் அதே பணிவுச்செல்வமாக வலம் வந்தாலும், உள்ளூரில் சீனியர்களை அவர் எப்படியெல்லாம் உதாசீனப்படுத்தினார் என்பதற்கு உதாரணம் எஸ்.டி.கே.ஜக்கையன். ஏற்கெனவே, ஜெயலலிதாவால் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட மறுநாளே, அந்தப் பதவி பறிக்கப்பட்ட ஜக்கையனின் சரிவு, ஓபிஎஸ் தலை தூக்கியபிறகு இன்னும் வேகமெடுத்தது.
2004-ல், மீண்டும் ஜக்கையனுக்கு தமிழக அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை வழங்கினார் ஜெயலலிதா. 2006-ல் மதுரை மத்திய தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தபோது அங்கே வேட்பாளராக நிறுத்தும் அளவுக்கு ஜக்கையன் மீது நம்பிக்கை வைத்திருந்தார் ஜெயலலிதா. ஆனாலும், தேனி மாவட்டத்தில் ஜக்கையனுக்கு எந்தப் பிடிமானமும் இல்லாமல் பார்த்துக்கொண்டார் ஓபிஎஸ். அதனால் மதுரை, சென்னையை மையப்படுத்தியே அரசியல் செய்தார் ஜக்கையன். அண்ணா தொழிற்சங்க மாநில நிர்வாகியாகவே அவரது அரசியல் வாழ்க்கை கழிந்தது.
தான் சந்தித்த கடைசி தேர்தலான 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், தன்னோடு முதல் தேர்தலில் களம்கண்ட ஜக்கையனுக்கும் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. அதில் வென்று கம்பம் சட்டப்பேரவை உறுப்பினரானார் ஜக்கையன்.
நிதி அமைச்சராக ஓபிஎஸ் சென்னையில் இருக்க, உள்ளூர் எம்எல்ஏ என்ற முறையில் ஆட்சியர் தொடங்கி மாவட்ட அளவிலான அத்தனை அதிகாரிகளையும் தன்னுடைய அன்பு சாம்ராஜ்யத்தின்கீழ் கொண்டுவர முயன்றார் ஜக்கையன். மகன் மணிமார்பனுக்கு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் தேனி மாவட்டச் செயலாளர் பொறுப்பை வாங்கிக் கொடுத்தார் ஜக்கையன். ஊரில் தன்னுடைய தம்பி, மகன்களைவிட ஜக்கையனின் கை ஓங்குவதை ஓபிஎஸ்ஸால் சகிக்க முடியவில்லை. சாய்ப்பதற்கான நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். ஜக்கையனும் அதை உணர்ந்தார்.
இந்த நேரத்தில் ஜெயலலிதா மறைய, கட்சி சசிகலாவின் கைக்குப் போய், ஓபிஎஸ் முதல்வர் பதவியை இழந்தார். "அப்பாடா இப்பதான்யா காத்து நம்ம பக்கம் அடிக்குது. இனிமே ஓபிஎஸ் ஆட்டம் அவ்வளவுதான்யா" என்று ஜக்கையனைவிட அதிகம் சந்தோஷப்பட்டார் அவரது மகன் மணிமார்பன். எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தவர் என்றாலும், இடையில் அங்கேயும் லடாய் வந்தபோது டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்களில் ஒருவராக பழனிசாமி அரசு மீது ஆளுநரிடம் புகார் கொடுக்கச் சென்றார் ஜக்கையன்.
ஆனால், தகுதிநீக்க அஸ்திரத்தை பழனிசாமி கையில் எடுத்தபோது, சட்டென்று டிடிவியிடம் இருந்து விலகி பழனிசாமியை ஆதரித்தார் ஜக்கையன். அதேநேரத்தில், ஓபிஎஸ் எதிர்ப்பை இன்னும் கூர்மைப்படுத்தினார் அவரது மகன் மணிமார்பன். தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தேனியில் ‘எடப்பாடியார் பேரவை’ தொடங்கி, ஓபிஎஸ்சுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதுடன், ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள் மீது சாணியடித்து மகிழ்ந்தது மணிபார்பன் குரூப்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சி ஜெயலலிதாவிடம்தான் போகும் என்று சரியாக ஜெ அணியைத் தேர்ந்தெடுத்த ஜக்கையனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவ்வளவு நேர்த்தியாக முடிவெடுக்க முடியவில்லை. ஓபிஎஸ்சுக்கு எதிரான நிலைப்பாடு அவருக்கு பலனைவிட, கெடுதலையே அதிகம் தந்தது. 2019 மக்களவைத் தேர்தலில் தன்னுடைய மகனுக்கு அவர் சீட் கேட்க, ஓபிஎஸ் தன்னுடைய மகனுக்கு சீட் கேட்க, கடைசியில் ஓபிஎஸ்தான் வென்றார்.
ஒக்கலிக கவுடா என்ற தன்னுடைய சமூகத்துக்கு ஒக்கலிக கவுண்டர் என்ற பெயரும் உண்டு என்பதால், அதைக்காட்டி கவுண்டர் சமூகத்து அமைச்சர்களுடன் ஒட்டிய ஜக்கையன், பழனிசாமியுடனும் அத்தகைைய நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றார். தனக்கில்லை என்றாலும், தன்னுடைய மகனுக்காவது தேனி மாவட்ட அதிமுக செயலாளர் பதவியைப் பெற்றுவிட வேண்டும் என்று துடித்தார். ஆனால், ஓபிஎஸ்சின் மீள்வருகை அந்த ஆசையை நிராசையாக்கியது.
அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த (இப்போதும் அவர்தான்) செய்யதுகான் இருதயக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அடுத்த மாவட்ட செயலாளர் ஜக்கையன்தான் என்றொரு எண்ணம் கட்சியில் பரவத் தொடங்கியது. பார்த்தார் ஓபிஎஸ். செய்யதுகான் மருத்துவமனையில் இருந்தபோதே, (2020 டிசம்பர் 27) ஜக்கையனையே கேட்காமல் அவருக்கு மாநில அமைப்புச் செயலாளர் பதவியை வாங்கிக்கொடுத்துவிட்டார். இனி மாவட்டச் செயலாளர் பதவியை அவர் கேட்க முடியாது, தன்னுடைய மகன் ரவீந்திரநாத்தையே அந்தப் பதவியிலும் உட்கார வைத்துவிடலாம் என்று ஓபிஎஸ் கணக்குப்போட, மருத்துவமனையில் இருந்த செய்யதுகான் நலமுடன் வீடு திரும்பிவிட்டார்.
பன்னீர்செல்வம் என்றால் பணிவு, அதிகாரம் எங்கிருக்கிறதோ அந்தத் திசையில் ஒரு கும்பிடு என்றே வாழ்க்கையை நடத்துபவர் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஜக்கையன் விஷயத்தில், “அவனை கருவறுக்கலைன்னா என் பேரு பன்னீர் இல்ல” என்று சூளுரைத்த அவர், அதைச் செய்தும்காட்டினார். ஈபிஎஸ்சிடம் தன்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, மாவட்டச் செயலாளராக விடாமல் தடுத்து, 2021-ல் தனக்கோ தனது மகனுக்கோ எம்எல்ஏ சீட் கிடைக்கவிடாமல் செய்துவிட்டார் ஓபிஎஸ் என்று புலம்புகிறார் ஜக்கையன். அவரது அடையாளமான அண்ணா தொழிற்சங்கப் பதவியும் 2020 ஜனவரியில் பறிக்கப்பட்டது. எப்படியோ தேனி மாவட்ட அதிமுக என்றால், தானும் தனது குடும்பமும்தான் என்று நிலை நிறுத்திவிட்டார் ஓபிஎஸ்.
ஒக்கலிக கவுடர்களை, கர்நாடக மாநிலத்திலிருந்து வந்து தேனி மாவட்டத்தின் கம்பம், கூடலூர், போடி பகுதிகளில் குடியேறிய வந்தேறிகள் என்பார்கள். ஜக்கையனோ தமிழகத்திலும், கேரளத்திலும் சொத்துச் சேர்த்து ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர். அவரை மீண்டும் நாடோடி போல வெவ்வேறு ஊர்களுக்கு ஓட ஓட விரட்டியவர் ஓபிஎஸ்.
இப்போது கட்டுரையின் முதல் பத்தியை மீண்டும் வாசித்துப் பாருங்கள்.
ஜக்கையன் என்ற பெயர் தமிழகம் முழுக்க இருக்கிற பழைய அதிமுகவினருக்கு நல்ல பரிச்சயமான பெயர். கற்பூரம்போல மணம் பரப்பிக்கொண்டிருந்த அவரை, பாக்கெட் சூடம்போல அடைத்துவிட்டார் பன்னீர். ஆனாலும், என்றாவது ஒருநாள் தனக்கான காலம் வராமலா போய்விடும் என்று ஓபிஎஸ்சை பழி தீர்க்க இன்னமும் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஜக்கையன்.
பாக்கெட் சூடம் பவரைக் காட்டுமா அல்லது பஸ்பமாகியே அணைந்துவிடுமா என்பதைச் சொல்ல காலமும் காத்திருக்கிறது!
முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:
ஓபிஎஸ்சை நம்பி வந்தவர்கள் என்ன ஆனார்கள்? - 3 ஓபிஎஸ்சை நம்பி வந்தவர்கள் என்ன ஆனார்கள்? - 3