நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் திரையரங்குகள் தன்னிச்சையாக, தாமாகவே முன்வந்து டிக்கெட் கட்டணத்தை கணிசமாகக் குறைத்துள்ளன. கரோனா காலத்துக்குப் பின்னர் ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் திரையரங்குக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில், இந்த இனிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் 15-க்கும் அதிகமான திரையரங்குகள் இயங்கிவந்தன. ஆனால், திருட்டு விசிடிக்களின் காலத்திலேயே அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் பல திரையரங்குகள் திருமண மண்டபங்களாக மாற்றம் அடைந்துவிட்டன. மிஞ்சிய 8 திரையரங்குகளிலும் கரோனா 2-ம் அலையின் பொதுமுடக்கத்துக்குப் பின்பு, மீண்டும் 4 திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
ராஜாஸ் மாலில் இயங்கிவந்த 3 திரையரங்குகள், பழமையான தங்கம் தியேட்டர் ஆகியவை இன்னும் திறக்கப்படவில்லை. தமிழகத்திலேயே படித்தவர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால், ஓடிடி தளங்களும் நாகர்கோவில் மக்களிடம் ஆழமாக ஊடுருவியுள்ளன. கரோனா 3-வது அலை குறித்த அச்சம் பரவலாக மீண்டும் எழுந்துள்ள நிலையில், மக்கள் திரையரங்குகளுக்கு சகஜமாக வரும் சூழல் இன்னும் கூட எழவில்லை. இந்நிலையில் தான், நாகர்கோவிலில் இப்போது இயங்கிவரும் 4 திரையரங்குகளும் தங்களுக்குள் பேசி டிக்கெட் கட்டணத்தை கணிசமாகக் குறைத்துள்ளன.
நாகர்கோவிலில் இதுவரை முதல்வகுப்பு டிக்கெட் கட்டணமாக எந்தப் படம் வெளியானாலும் ரூ.150 வசூலிக்கப்பட்டு வந்தது. சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலும் ரூ.130 கட்டணமாக வசூலித்து வந்தன. ஆனால், இப்போது பெரிய நடிகர்களின் படங்களுக்கே ரூ.100 முதல் 110 வரையே டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தமிழக அரசின் உத்தரவுப்படி, மாநகராட்சிப் பகுதிகளில் இயங்கும் திரையரங்குகளில், முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்குகளுக்கு முதல் வகுப்புக் கட்டணமாக ரூ.150 வரை வசூலித்துக்கொள்ள முடியும். அதை நகராட்சி அந்தஸ்தில் இருக்கும்போதே செவ்வனே செய்து வந்த நாகர்கோவில் திரையரங்குகள், இப்போது டிக்கெட் கட்டணத்தை இந்த அளவுக்கு குறைத்திருப்பது திரைப்பிரியர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநாடு படத்துக்கு வசந்தம் பிக்சர் பேலஸில் ரூ.100 மட்டுமே முதல்வகுப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதேபோல் மெகா ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா படத்துக்கும் முதல்வகுப்புக் கட்டணம் ரூ.110 மட்டுமே ராஜேஸ் திரையரங்கில் வசூலிக்கப்படுகிறது. ரூ.150 ஆக இருந்த நாகர்கோவிலின் முதல்வகுப்புக் கட்டணத்தை குறைத்ததில், ஓடிடி தளங்களின் பங்களிப்பே அதிகம் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து திரையரங்கத் தரப்பில் பேசினோம். ‘‘மக்களிடையே ஓடிடி ஆழமாக ஊடுருவிவிட்டது. ரஜினி, கமல், அஜித், விஜய் என பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு மட்டும்தான் குடும்பத்தோடு தியேட்டர் பக்கமே வருகின்றனர். வள்ளி தியேட்டரில் நேற்று முன்தினம் ரைட்டர் படத்தின் இரவுக்காட்சிக்கு மொத்தமே ஒரே ஒருவர் மட்டும்தான் வந்திருந்தார். அந்தக் காட்சியை ஓட்ட மின்கட்டணத்துக்கு மட்டுமே ரூ.300 செலவாகும். அதுபோக ஒருவருக்கு காட்சி ஓட்ட, 7 பேர் தியேட்டரில் வேலை செய்கிறோம். என்னதான் நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தாலும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே, மக்கள் தியேட்டருக்கு வரும் மனநிலையில் இருக்கிறார்கள். அதனால்தான் மக்களை மீண்டும் திரையரங்கம் பக்கம் அழைத்துவர டிக்கெட் கட்டணத்தைக் குறைத்துள்ளோம்’’ என்கிறார்கள்.
தியேட்டர் பக்கம் கூட்டம் கூடியதும், கட்டணத்தை மீண்டும் கூட்டாமல் இருந்தால் சரிதான்!