பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி பேருந்து நிலையத்தில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடப்பதால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பழநி பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி, சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள், பழநி வழியாக வெளியூர் செல்லும் பயணிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். வீடு இல்லாத ஆதரவற்றோர் பலரும் பேருந்து நிலையத்தில் தங்குகின்றனர்.
அவர்கள் பயணிகள் இருக்கை, ஓய்வறை உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்து கொள்கின்றனர். அதே இடத்தில் அசுத்தமும் செய்கின்றனர். இந்த நிலையில், சிலர் பேருந்து நிலையம் மற்றும் இலவச கழிப்பறையை மது அருந்தும் பாராக மாற்றி உள்ளனர். அவர்கள் மது போதையில் பயணிகளிடம் பணம் கேட்டு மிரட்டுவதும், பணம் தர மறுக்கும் பயணிகளை தகாத வார்த்தைகளில் திட்டுவதுமான செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
சில சமயங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளை ஏமாற்றி பணம் பறிப்பது போன்ற குற்றச் செயல்களும் நடக்கின்றன. இதேபோல், பழநிக்கு வரும் பக்தர்களை, பயணிகளை திருநங்கைகள் பணம் கேட்டு விரட்டிச் செல்வதாக கூறப்படுகிறது. இதனை போலீஸாரோ, நகராட்சி நிர்வாகமோ கண்டு கொள்வதில்லை.
» பழநி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?
» விவசாய தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை: பழநியில் ‘விதை உருளை’ மூலம் நடவு பணி
இந்தநிலையில் இன்று (ஜூன் 12) பிற்பகலில் மது போதையில் பெண்கள் சிலர் பேருந்து நிலையத்தில் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளில் பேசி கைகலப்பில் ஈடுபட்ட செயல் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. திடீர் அசம்பாவிதம் மற்றும் அவசர உதவிக்கு காவல் உதவி மையத்தை அணுகினால் போலீஸார் இல்லாத நிலை உள்ளது.
இது போன்ற செயல்களால் பழநி பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. போலீஸாரும், நகராட்சி அதிகாரிகளும் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து பயணிகளை பாதுகாக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.