பள்ளி மாணவனுடன் காதல் வளர்த்த பயிற்சி ஆசிரியை: ஆண்டுகள் கழித்து போக்சோவில் கைது

By காமதேனு

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவனிடம் காதல் வளர்த்த பயிற்சி ஆசிரியை, 3 ஆண்டுகள் கழித்து போக்சோவில் கைதாகி இருக்கிறார்.

பத்தாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியை கைதானதாக இந்த செய்தி பரவி வருகிறது. மேலும், தமிழகம் முழுக்க மாணவியர் புகார்களின் அடிப்படையில் கைதாகி வரும் ஆசிரியர்களுடன் இந்த ஆசிரியை கைது ஒப்பிட்டு நகைப்புக்கிடமாகி வருகிறது. பள்ளி வளாக பாலியல் தொந்தரவு மற்றும் போக்சோவில் ஆசிரியர்கள் கைது ஆகியவற்றை இந்த ஒப்பீடு நீர்க்கவும் செய்கிறது. அரியலூர் ஆசிரியை போக்சோ கைதின் பின்னணி, இதர போக்சோ கைதுகளில் இருந்து வெகுவாய் மாறுபட்டது.

அரியலூர் மாவட்டம் தனியார் பள்ளி ஒன்றில், 3 வருடங்களுக்கு முன்னர் அம்பாபூரை சேர்ந்த ராசாத்தி என்ற இளம்பெண் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்திருக்கிறார். ஆசிரியர் பயிர்சி கல்லூரி மாணவியான இவரும், பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவரும் காதல் என்ற பெயரில் உருகி இருக்கின்றனர்.

அந்த மாணவர் பின்னர் பிளஸ் 2 முடித்த பிறகு கல்லூரி மேற்படிப்புக்காக அண்மையில் அருகிலிருக்கும் பெரம்பலூர் கல்லூரியில் சேர்ந்தார். கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலையும் கைவிடாததில் இருதரப்பு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அதனால் அக்டோபர் மாதம் பெரம்பலுர் மாவட்டம் குன்னம் வந்த காதல் ஜோடி, ஒரு கோயிலில் வைத்து மாலை மாற்றிக்கொண்ட கையோடு தற்கொலைக்கும் முயன்றிருக்கின்றனர். இந்த தற்கொலை முயற்சி தொடர்பாக குன்னம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, பையனுக்கு 18 வயதாக சில மாதங்கள் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சிறார் சிறுவனை வற்புறுத்தி மணந்துகொண்டதாக வழக்கு பதிந்த போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் ராசாத்தியை கைது செய்தனர். போக்சோவின் கீழ் ஆசிரியை கைது என்று பரவும் செய்தியின் பின்னணி இதுதான்.

தமிழகம் முழுக்க பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு, ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாக தினமொரு புகார் எழுந்து வருகிறது. அவற்றின் மத்தியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியை என்பதாக அரியலூர் பள்ளி மாணவன் விவகாரம் எள்ளி நகையாடப்படுகிறது. இது பள்ளிகளில் தொடரும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை மற்றும் அவை தொடர்பான மாணவிகளின் விபரீத முடிவுகள், புகார்கள், ஆசிரியர் கைதுகள் என சகலத்தையும் சாதாரணமாக்குகின்றன.

ஆணோ பெண்ணோ, குழந்தை மற்றும் சிறாருக்கு எதிரான பாலியல் தொல்லை என்பது நகைப்பதற்கு உரியதல்ல. பாலியல் தொல்லைகள், அவற்றை கட்டுப்படுத்தும் போக்சோ கைதுகளுக்கு சமூகம் சற்றும் பொறுப்புணர்வோடு இடைவினையாற்றட்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE