உசிலம்பட்டியை மீண்டும் உலுக்கும் பெண் சிசுக் கொலை?

By காமதேனு

உசிலம்பட்டி பகுதியில் மற்றுமொரு பெண் சிசுக் கொலை புகார் தொடர்பாக இன்று(டிச.28) போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பெரிய கட்டளை கிராமம். இங்கு வசிக்கும் முத்துப்பாண்டி - கௌசல்யா தம்பதியருக்கு, 4 மற்றும் 2 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது முறையாக கருவுற்ற கௌசல்யாவுக்கு, சேடப்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழகும் ஆரோக்கியமுமான பெண் குழந்தை டிச.21 அன்று பிறந்தது.

பிரசவத்துக்குப் பின்னர் வீடு திரும்பிய தம்பதியரிடம், குழந்தையின் அழுகுரல் கேட்காதது குறித்து அண்டையில் வசிப்போர் விசாரித்துள்ளனர். அதற்கு குழந்தை உடல் நலமின்றி இறந்துவிட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும், சிசுவின் உடலை வீட்டின் முன்பகுதியிலேயே புதைத்துள்ளனர். இந்த தகவல் கிராம செவிலியரான சுகன்யாவுக்கு சென்றது.

உடனே அவர், பிறந்து சிசு குறித்து முத்துப்பாண்டி - கௌசல்யா தம்பதியரிடம் விசாரித்துள்ளார். முன்பின் முரணாக அவர்கள் தகவல் தெரிவிக்கவே, கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டியிடம் சுகன்யா விபரம் தெரிவித்தார். முனியாண்டியும், கரோனா தடுப்பூசி விபரம் விசாரிக்கும் பாவனையில் வீட்டில் உள்ளோர் தகவல்களை முத்துப்பாண்டியிடம் விசாரித்துள்ளார். முத்துப்பாண்டி - கௌசல்யா தம்பதி எதையோ மறைப்பதாக அப்போதும் தெரியவந்தது. இதனையடுத்து, சிசுவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக, சேடப்பட்டி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகாரளித்தார்.

போலீஸார் விசாரணைக்கு வருவதை அறிந்ததும் முத்துப்பாண்டி குடும்பத்தினர் வீட்டை பூட்டிக்கொண்டு தலைமறைவானார்கள். அவர்களை வரவழைத்து பெற்றோர் முன்னிலையில் சிசுவின் சடலத்தை தோண்டியெடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். சிசு உடற்கூராய்வு, போலீஸாரின் விசாரணையை ஆகியவற்றை அடுத்தே, பெண் சிசுக் கொலை தொடர்பான தகவல்கள் உறுதியாகும்.

சமுதாயத்தின் தீங்குகளில் ஒன்றான வரதட்சணை காரணமாக, மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெண் சிசுக் கொலை அதிகம் நிலவி வந்துள்ளது. ஊடகங்களின் புலனாய்வில் 35 வருடங்களுக்கு முன்னர் இந்த விவகாரம் வெளியுலகுக்கு புலப்பட்டது. கள்ளிப்பால், நெல் மணி எனத்தொடங்கி பலவிதமான கொடூரங்களால் பெண் சிசுகள் அதன் குடும்பத்தாராலே பரிதாபமாய் கொல்லப்பட்டனர். அடுத்தடுத்து பெண் குழந்தை பிறக்கும் குடும்பங்களில் இந்த போக்கு அதிகம் இருந்தது.

தொட்டில் குழந்தை திட்டம், காவல்துறை நடவடிக்கை, பெண்களுக்கு கல்வியறிவு மற்றும் பொருளாதார அடித்தளம் ஆகியவற்றுக்கான பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டதன் வாயிலாக, அப்பகுதியில் பெண் சிசுக் கொலை வெகுவாய் குறைந்தது. ஆனபோதும் முழுதுமாக முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் மற்றுமொரு சோகமாக, பெரியகட்டளை கிராமத்தில் பிறந்து 6 நாட்களே ஆன பெண் சிசுவின் மர்ம மரணம் தமிழகத்தை உலுக்கி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE