திருவொற்றியூர் கட்டிட விபத்துக்கு ஆட்சியாளர்களே காரணம்: சீமான்

By ரஜினி

‘திருவொற்றியூரில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு ஆட்சியாளர்களே காரணம்’ என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டம் தெரிவிக்கும் வகையில், கடந்த 2016-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக சீமான் உட்பட 200 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, சீமானுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதை அடுத்து பிடிவாரண்டைத் திரும்பப்பெற வேண்டி, இன்று சீமான் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “2016-ம் ஆண்டு வழக்கு விசாரணைக்காக இன்றுதான் ஆஜராக முடிந்தது. 200 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் காலத்தில் கட்டிய கட்டிடங்கள் எல்லாம் இன்னும் நிலையாக உள்ளன. ஆனால் திருவொற்றியூர் குடிசைமாற்று வாரிய கட்டிடம் இடிந்து விழுந்துவிட்டது. இதற்கு முற்றிலும் ஆட்சியாளர்களின் தவறுகளே காரணம்.

மேலும், மக்கள் குறித்து அரசு கவலை கொள்ளவில்லை. எதிர்க்கட்சியாக இருந்த போது நீட் மற்றும் 7 பேர் விடுதலைக்கு போராடிய திமுக, இப்போது ஆளுங்கட்சியானதும் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் மக்களை ஏமாளியாக்குகிறது.

தி.மு.க அதிகாரத்தில் இருப்பதால், கரோனாவை காரணம்காட்டி நாகையில் நடக்கவிருந்த எங்களது பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டு, கோவையில் உதயநிதி ஸ்டாலின் கூட்டம் நடத்த மட்டும் அனுமதித்தது சரியா?” என கேள்வி எழுப்பியவர் தொடர்ந்து, “தேர்தலுக்காக அளித்த பொய்யான வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என மக்கள் நம்புவது முட்டாள் தனம். வரவுள்ள மாநகராட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்” என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE