ராஜேந்திர பாலாஜி குறித்து அதிமுகவினரிடம் விசாரணை

By காமதேனு

பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வரிசையாகப் புகார்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அவரைப் பற்றி அதிமுகவினர் சிலரிடம் காவல் துறை தனது விசாரணையைத் தொடர்ந்து வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகாரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 17-ம் தேதி முதல் தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல் துறை அறிவித்துள்ளது.

தலைமறைவான அவரைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெங்களூரு, சென்னை, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் போலீஸார் தேடிவருகின்றனர்.

தனது முன் ஜாமீன் மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தங்களது விளக்கத்தைக் கேட்காமல் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பித்துவிடக் கூடாது என்பதற்காக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவும் தாக்கல் செய்திருக்கிறது. அடுத்து ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க, லுக் அவுட் நோட்டீஸ் டிச.23-ல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாத்தூரில் சத்துணவில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது கூடுதலாக இன்னொரு புகார் தரப்பட்டிருந்த நிலையில், விருதுநகர் எஸ்பி அலுவலகத்துக்கு நேற்று(டிச.27) மேலும் 3 புகார்கள் வந்துள்ளன.

வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து தலா ரூ.7 லட்சம் ஏமாற்றியதாக இந்த 3 புகார்தாரர்களும் தெரிவித்துள்ளனர். இவை குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காவல் துறையால் தேடப்படும் ராஜேந்திர பாலாஜி குறித்து, பலரும் பலவிதமாகப் பேசிவருகின்றனர்.

தலைமறைவாக உள்ள அவருக்கு அதிமுகவினர் சிலர் உதவி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து போலீஸார் அதிமுக ஐடி பிரிவு துணைச் செயலாளர் விக்னேஸ்வரன், இளம் பெண் பாசறைச் செயலாளர் ஏழுமலை ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இந்நிலையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் ராஜேந்திர பாலாஜி பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீஸார் அந்தப் பகுதிகளில் தேடுதலை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். கூடவே, அந்தப் பகுதி அதிமுகவைச் சேர்ந்த முக்கியமான நபர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE