ஒமைக்ரான் இந்தியாவையும் அச்சுறுத்தி வரும் நிலையில், சுகாதாரத்துறையில் மிகவும் மோசமான மாநிலங்கள் பட்டியில் தேசத்தின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் இருப்பதாக நிதி ஆயோக் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நிதி ஆயோக் அமைப்பானது 2019-20-ம் ஆண்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தான், சுகாதாரப் பணிகளில் நாட்டிலேயே மிக மோசமான மாநிலம் என உபியை சுட்டிக்காட்டி இருக்கிறது நிதி ஆயோக். இத்தனைக்கும் இந்த மாநிலத்தை பாஜக மிருக பலத்துடன் ஆட்சி செய்து வருகிறது.
கம்யூனிஸ்ட்கள் ஆளும் கேரளத்தை, நாட்டிலேயே சுகாதாரப் பணிகளில் முன்னேறிய முதல் மாநிலமாக நிதி ஆயோக் பட்டியலிட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாம் இடத்தையும் தெலங்கானா மூன்றாம் இடத்தையும் சுகாதாரப் பணிகளில் முன்னேறிய மாநிலங்கள் வரிசையைத் தக்கவைக்கின்றன.
மிக மோசமான மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசத்தையடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிஹார் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் பிடித்துள்ளன.
இதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளிலுமே உபி சுகாதாரப் பணிகளில் பின் தங்கிய நிலையிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. சிறிய மாநிலமான மிசோரம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குவதாக நிதி ஆயோக் பட்டியலிட்டுள்ளது.
கேரளமும் தமிழகமும் சுகாதாரத் துறையில் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலுமே சிறந்து விளங்குவதாக நிதி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக அனைத்துத் துறைகளிலும் சிறப்பான மாற்றத்தைக் கண்ட மாநிலமாக தெலங்கானாவை அடையாளப்படுத்தி உள்ளது. சிறிய மாநிலங்களில் மிசோரத்துக்கு அடுத்தபடியாக திரிபுரா சிறப்பான மாற்றங்களை பதிவு செய்துள்ளது.