கர்நாடகாவை சேர்ந்த மத்திய நீர்வளத்துறை இணையமைச்சரை மாற்ற வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

By கி.பார்த்திபன்

நாமக்கல்: "கர்நாடக மாநிலத்தில் இருந்து மத்திய நீர்வளத்துறை இணையமைச்சரை தேர்வு செய்திருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக உள்ளது. இது தமிழகத்திற்கு செய்த துரோகம். அண்டை மாநில நதிநீர் விவகாரங்களில், தமிழக முதல்வரே மாநில விவசாயிகளுக்கு எதிராக இருப்பது போல் உள்ளது" என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர்.வேலுசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43 அடியாக சரிந்துள்ளது. இதனால் தற்போது குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு இல்லாமல் சுமார் 6 லட்சம் ஏக்கர் காவிரி டெல்டா பாசன விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் தொடர் மவுனம் காரணமாக டெல்டா விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளனர்.

கர்நாடகா அரசு ஒரு ஆண்டுக்கு விகிதாசார அடைப்படையில் 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு டெல்டா பாசனத்திற்காக திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்ற ஆண்டு கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இருந்தும் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை வழங்காமல் அநீதியை செய்தது. கர்நாடக அரசு கடந்த 1924-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தபடி அங்கு 5 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மட்டும் தான் பாசனத்திற்காக தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், தற்போது 35 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விளை நிலங்கள் சாகுபடி செய்ய தண்ணீர் எடுத்து வருகிறது. காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் இரண்டும் கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்கள் தற்போது பாசன வசதி இல்லாமல் பாலைவனமாக மாறிவருகிறது. மேற்குதொடர்ச்சி மலையில் நல்ல மழை பொழிவின் காரணமாக தற்போது கர்நாடக அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது.

தமிழக அரசு அதன் கூட்டணி கட்சியிடம் சுமூகமாக பேச்சுவார்தை நடத்தி, காவிரியில் தண்ணீர் பெற்றுத் தராமல் மவுனம் காப்பது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். ஆகவே, தமிழக அரசு மவுனத்தை கலைத்து விட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும்.

அண்டை மாநில அரசுகள், தமிழகத்துக்கு வரும் நீர் ஆதாரங்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்வதை தமிழக முதல்வர் உடனடியாக தடுத்து நிறுத்தாமல் இருப்பதைப் பார்க்கையில் மாநில விவசாயிகளுக்கு எதிராக தமிழக முதல்வரே இருப்பது போல் உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் நீர்மேலாண்மையில் ரூ.10,000 கோடியில் 1,000 தடுப்பணை தமிழகம் முழுவதும் உள்ள ஆற்றுப்படுகையில் கட்டப்படும் என்ற வாக்குறுதி மறக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு, நீர் மேலாண்மை விஷயத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டிக்கிறோம். மத்திய பாஜக அரசு தற்போது மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பதவியை, கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்வு செய்து உள்ளது. இது பாஜக அரசு தமிழகத்திற்கு செய்த துரோகம்.

கர்நாடகா, தமிழ்நாடு இருமாநில நதிநீர் பிரச்சினையில் கர்நாடகவிற்கு சாதமாக செயல்படும் விதமாக மத்திய பாஜக அரசு பொறுப்பு வழங்கி இருப்பது இரு மாநிலத்திற்கும் அதிகப்படியான கருத்து வேறுபாடு ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது. எனவே கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்வு செய்த மத்திய பாஜக நீர்வளத்துறை இணை அமைச்சரை மாற்றி அமைக்க வேண்டும்.

கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை தர மாட்டோம் என்று வீரவசனம் பேசினால் தமிழக விவசாயிகளை ஒன்றிணைந்து தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு கர்நாடகத்துக்கு அனுப்பப்பட்டு வரும் மின்சாரத்தை அங்கே கொண்டு போக விடாமல் மின் கம்பிகளை அறுத்து கர்நாடகாவை இருளில் மூழ்கடித்துப் போராட்டம் செய்வோம். மத்திய, மாநில அரசுகள் போராட்டதை ஒடுக்க நினைத்தால் தமிழகத்தின் உரிமைக்காக ரத்தம் சிந்தவும் தயங்கமாட்டோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE