காட்டுப்பன்றித் தொல்லையால் அவதியுறும் விவசாயிகள்

By என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்டத்தில், விவசாயிகளின் விளைபொருட்களை காட்டு விலங்குகள் தொடர்ந்து நாசம் செய்துவருகின்றன. இதைக் கட்டுப்படுத்தும்வகையில் கேரளத்தில் இருப்பதுபோல், தமிழகத்திலும் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செண்பக சேகரன்

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட முன்னோடி விவசாயியும், மாவட்ட வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினருமான செண்பக சேகரன் காமதேனுவிடம் கூறும்போது, ‘‘கன்னியாகுமரி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மாவட்டம். இங்கு அதிக அளவில் ரப்பர், வாழை, நெல், மரவள்ளிக்கிழங்கு ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் வாழை, மரவள்ளி, நெல் போன்ற பயிர்கள் விளைந்திருக்கும் நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள், குரங்குகள், முள்ளான், மிளா மற்றும் யானை போன்ற வன விலங்குகள் நீண்ட காலமாகவே புகுந்து கடும்சேதத்தை ஏற்படுத்திவருகின்றன. இந்த மிருகங்கள் சமீபகாலமாக மனிதர்களையும் தாக்கி உயிர் சேதத்தையும் ஏற்படுத்துகின்றன. இதனால் தங்கள் சொந்த நிலங்களிலேயே விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது.

அண்டை மாநிலமான கேரளத்தில் அம்மாநில விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பெரும் சேதத்தை ஏற்படுத்திவரும் காட்டுப்பன்றிகளை வனத் துறையின் ஒத்துழைப்போடு சுட்டுக்கொல்ல கடந்த 2011-ம் ஆண்டே அனுமதி வழங்கப்பட்டு, அது செயல்பாட்டிலும் உள்ளது. இதனால் கேரள மாநில விவசாயிகளின் விளைபொருட்கள் காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கப்படுகின்றன. குமரி மாவட்டத்திலும் இதேபோல், பயிர்களுக்கு பெரும் சேதத்தை விளைவித்துவரும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல ஏதுவாக வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து, விவசாயத்தையும், விவசாயிகளின் நலனையும் பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE