வாட்ஸ்அப் குழுவில் பதிவிடப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு குழு அட்மின் பொறுப்பாகமாட்டார் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.ராஜேந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
‘நான் கரூர் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு நடத்தி வருகிறேன். இந்தக் குழுவில் வழக்கறிஞர் பேச்சியப்பன் ஜாதி மோதலை உருவாக்கும் வகையில் ஆட்சேபகரமான பதிவு ஒன்றைப் பதிவிட்டார். இதுகுறித்து வழக்கறிஞர் கதிர்வேல், தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் என் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நான் வாட்ஸ்அப் குழுவின் அட்மின் மட்டுமே. நான் அந்த ஆட்சேபகரமான பதிவுக்குப் பொறுப்பாகமாட்டேன். இருப்பினும் போலீஸார் என்னை வழக்கில் சேர்த்துள்ளனர். இதனால் என்மீதான வழக்கை ரத்துசெய்ய வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வாட்ஸ்அப் பதிவு தொடர்பாக தடயவியல் அறிக்கை இன்னும் வரவில்லை. அதன் பிறகே அந்தப் பதிவை பேச்சியப்பன் பதிவிட்டாரா அல்லது அவரது பெயரில் மனுதாரர் பதிவிட்டாரா என்பது தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கதிர்வேல் தரப்பில், அந்தப் பதிவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதும் பேச்சியப்பன் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். சில நாட்களில் அவர் மீண்டும் குழுவில் சேர்க்கப்பட்டார். மனுதாரருக்கும் அந்தப் பதிவை பதிவிட்ட வழக்கறிஞருக்கும் தொடர்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வாட்ஸ்அப் பதிவு தொடர்பான தடயவியல் அறிக்கை வரும் முன்பு இந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கமுடியாது. வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் தகவல்களுக்கு குழு அட்மின் பொறுப்பாகமாட்டார் என மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் வாட்ஸ்அப் குழு அட்மின் என்ற காரணத்துக்காக மட்டும் மனுதாரரின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தால், குற்றப்பத்திரிகையில் அவரது பெயரை நீக்கவேண்டும். இருப்பினும் வழக்கில் மனுதாரரை தொடர்புபடுத்தும் வகையில் போலீஸார் வேறு தகவல்களைச் சேகரித்திருந்தால், அவர் வழக்கை தகுதி அடிப்படையில் சந்திக்க வேண்டும். இந்த மனு முடிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.