சீமானுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது

By காமதேனு

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும்போது, அங்கு போராட்டம் நடத்துவோம் என்று கூடிய திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வலியுறுத்தி, கோவையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்துக்காக குவிந்த நிலையில், அதே பகுதிக்கு திமுகவின் இளைஞரணி மற்றும் விவசாய அணியைச் சேர்ந்த சிலர் வந்தனர். ‘‘திமுக குறித்தும், முதல்வர் குறித்தும் சீமான் இழிவாகப் பேசினால் எதிர்ப்பு தெரிவிப்போம்’’ எனக் கூறி, திமுகவினர் அதே பகுதியில் நின்ற நிலையில், அவர்களை அப்புறப்படுத்த காவல் துறையினர் முயன்றனர்.

அப்போது சீமானுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய திமுகவினரை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச்செல்ல முயன்றனர். இதனால் போலீஸாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்த திமுகவினர் 15 பேரை காவல் துறையினர் கைது செய்து, போலீஸ் வாகனத்துக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

திமுகவினரை வலுக்கட்டாயமாக கைது செய்யும் போலீஸார்

அப்போது, அந்த இடத்துக்கு வந்த சீமான், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுவிக்கக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றோம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்கின்றனர். ஆனால் ராஜிவ் கொலை மற்றும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க மறுக்கின்றனர். அண்ணா பிறந்தநாளில் விடுதலையான 700 சிறைக் கைதிகளில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை. இதுகுறித்து குழு அமைக்கப் போவதாக தமிழக அரசு சொல்கின்றது. தேர்தலின் போது 7 தமிழர் விடுதலை பேசுகின்றனர், இப்போது விடுவிக்க மறுக்கின்றனர். மனிதநேய அடிப்படையில், கருணை அடிப்படையில் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

மேலும், “திமுகவினர் நாம்தமிழர் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவதில் பெருமைதான். அந்த அளவுக்குப் பெரிய ஆளாகி இருக்கின்றோம். அரசுக்கு எதிராகப் பேச வேண்டும் என்பது மனநோய் அல்ல, அரசு சரியா இருந்தால் யாரும் பேசப்போவதில்லை” என்று சீமான் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE