பாலியல் புகார்களில், பாதிக்கப்பட்ட பெண் மறுத்தாலும், ஆண் மீது நடவடிக்கை நிச்சயம்!

By காமதேனு

பாலியல் தொல்லை தந்தவர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தாலும், புகாருக்கு ஆளானவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு, வழக்கறிஞர் சங்கத் தலைவரான முனியசாமி என்பவர் பாலியல் தொல்லை தந்துள்ளார். இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்டது. கண்காணிப்புக் கேமரா பதிவுகள் உள்பட பல்வேறு ஆவணங்கள் முனியசாமிக்கு எதிராக இருந்தன.

இதற்கிடையில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தாக்கல் செய்த அறிக்கையில், பெண் ஊழியரின் கோரிக்கையை ஏற்று அவரை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமி மீது நடவடிக்கை எதையும் எடுக்க வேண்டாம் என பெண் ஊழியர் கோரியதால், பாலியல் தொல்லை குறித்த புகார் முடித்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ’பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கையை தொடர வேண்டாம் என கூறினாலும், நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருக்காது’ என தெரிவித்தார். மேலும், புகாருக்கு ஆளான முனியசாமி மீது காவல்துறை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதுடன், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி பரிந்துரைக்கவும்’ உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE